மட்டக்களப்பில் தொடர்ச்சியாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் குழுவினாரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த மோர்ணிங்க் லீடர்" தெரிவித்துள்ளதாவது:
மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக்கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விபரங்களும் தெரிந்திருக்கின்றன. ஆயுதங்களை காட்டி பெற்றோரையும் சகோதரர்களையும் மிரட்டி வீட்டுக்குள் வரும் இக்கும்பல், குறிப்பிட்ட பெண்ணின் பெயரை கூறி அழைத்து, கதறக் கதற வாயை துணியால் கட்டிவிட்டு தூக்கிச்சென்று விடுகின்றன.
இது குறித்து காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்தால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதே மாதிரியான சம்பவம் ஒன்று, அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நாளன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இரண்டு இளம் பெண்களும் கல்முனையில் ஒரு இளம்பெண்ணும் கடத்தப்பட்டு வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யச் சென்றபோது, அவர்கள் தேர்தல் வேலையில் மும்முரமாக இருந்ததாகவும் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அச்சத்துடன் பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுகின்றனர்.
இளம் பெண்களை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர் இரவில் நிம்மதியான தூங்க முடியவில்லை என்றும் எந்த நேரத்திலும் ஆயுதக்கும்பல்கள் வந்து கதவைத்தட்டும் அபாயமே காணப்படுகிறது என்றும் பல பெற்றோர் தமது மகள்மாரை பாடசாலைக்கு மட்டுமல்ல வீட்டின் வாசற்பக்கமே செல்ல அனுமதிப்பதில்லை என்றும் பயத்தில் உறைந்து போய் உள்ள மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவைத்தவிர வேறு எந்தக் குழுவினரும் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, அங்கு அரங்கேறும் இந்த அட்டூழியங்களை அரச படையினர் அல்லது பிள்ளையான் குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனநாயக வழிக்கு திரும்பிவிட்டோம் என்ற கோசத்துடன் முதலமைச்சராக கொழும்பில் பிள்ளையான் பதவியேற்றுக்கொண்டிருக்க, மட்டக்களப்பில் அவரது குழிவினர் வெள்ளை வான் கடத்தலிலும் வன்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வாய்மூடி மௌனியாக பார்த்துக்கொண்டிருக்கின்றார். இதுதான் மகிந்த சிந்தனையோ? என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment