Wednesday, 21 May 2008

இலங்கையின் மனித உரிமைகள் விசாரணைகளுக்கு வெளிநாடுகள் நிதியுதவி வழங்கவுள்ளன

இலங்கையில் இடம்பெற்ற முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு நிதியுதவி வழங்க ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன முன்வந்துள்ளன. இணையத்தளத்தின் ஊடான நேரடி தொலைக்காட்சிவழி உரையாடல் சாட்சியமளிக்கும் தொழில்நுட்பத்துக்கு அந்த நாடுகள் உதவிவழங்க முன்வந்துள்ளன.

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி மூதூரில் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை மற்றும் திருகோணமலையில் ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டமை குறித்த விசாரணைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், எனினும், இவற்றுக்கு மேலும் சாட்சியங்கள் தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க உடலாகம தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர்குழு வெளியேறியதைத் தொடர்ந்து இணையத்தளத் தொழில்நுட்பத்துக்கான வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டன. சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் ஊடாகவே விசாரணை ஆணைக்குழு தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றிருந்தது. இரண்டு படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாகவும் பல்வேறு நாடுகளிலிருக்கும் சாட்சியாளர்களை நேரடி தொலைக்காட்சிவழி உரையாடல்கள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது. அவர்களுக்கான தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை அமெரிக்கா, கனடா ஆகியன ஏற்படுத்திக்கொடுத்திருந்தன” என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு வெளியேறியிருப்பதால் வெளிநாடுகளிலுள்ளவர்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதில் விசாரணை ஆணைக்குழு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. இவற்றை நிவர்த்திசெய்யும்வகையில் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உதவிசெய்ய முன்வந்துள்ளன. முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறுத்தப்பட்டால் அவை இலங்கையின் மனித உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் உதவிகள் கிடைக்கப்பெற்றால் பொதுமக்கள் விசாரணைகளை சரியான முறையில் முன்னெடுத்துச்செல்லமுடியும் என விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.


No comments: