* இலங்கையின் வெற்றி உறுதி; அமைச்சர் போகொல்லாகம ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையைத் தெரிவு செய்வது தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மிகாட்டர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக குழப்பமடையத் தேவையில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் பல அமைப்புகள் பல்வேறுபட்ட கருத்துகள் வெளியிடும் சம்பிரதாயம் உலகில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள தேர்தலில் இலங்கைக்கு வாக்களிக்க வேண்டாமென முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர் மற்றும் அவரது மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான ரொசலின் காட்டரால் உருவாக்கப்பட்ட கார்ட்டர் நிலையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்தாவது;
"மேற்படி கருத்து தொடர்பில் நாம் குழப்பமடையத் தேவையில்லை. பல அமைப்புகள் தமது சார்பில் பல்வேறு பட்ட கருத்துகளை வெளியிடுகின்ற சம்பிரதாயம் உலகில் காணக்கூடியதாகவுள்ளது.
எவ்வாறாயினும் இன்று புதன்கிழமை இத் தேர்தலில் இலங்கை பங்குபற்றவுள்ளது. இதில் உள்ள உறுப்பு நாடுகள் எமது நாடுகள் சார்பாகவும் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பாகவும் மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளன.
இதன் காரணமாக இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய காரணிகளாக நான் கருதவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தேர்தலில் இலங்கை உறுதியான நிலைப்பாட்டில் போட்டியிடும் அதே வேளை இத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment