விதுரன்
வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது.
வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தரப்பு நம்புகிறது. வவுனியாவிலும் மணலாறிலும், யாழ்.குடாவிலும் சாதகமற்றதொரு களநிலையிருக்கையில் மன்னாரிலேயே படையினரின் முழுக் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியா களமுனை இலக்கற்றது. மணலாறிலிருந்து புறப்பட்டவர்கள் முல்லைத்தீவு செல்ல முயல்கின்றனர். முகமாலையிலிருந்து புறப்பட முயல்வோர் ஆனையிறவு பற்றிச் சிந்திக்கின்றனர். மன்னாரில் மோதுபவர்கள் கரையோரப் பாதை பற்றி கவனம் செலுத்துகின்றனர். இதனால், அனைத்துக் களமுனைகளிலும் தொடர்ந்தும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இது நாளுக்கு நாள் விரிவடைந்தும் வருகிறது.
`ஏ9' வீதிக்கு மேற்கே, வவுனியா - மன்னார் வீதியிலிருந்து புறப்பட்ட படையினர் வடக்குப் பக்கமாக நகர்கின்றனர். மடுவைக் கைப்பற்றுவதை பிரதான இலக்காகக் கொண்டிருந்த படையினர் தற்போது மன்னார் கரையோரமாயிருக்கும் மன்னார் - பூநகரி வீதியை கைப்பற்றும் நோக்கில் படைநகர்வை மேற்கொள்கின்றனர். மடுவைக் கைப்பற்றிய 57 ஆவது படையணியும் அடம்பனைக் கைப்பற்றிய 58 ஆவது படையணியும், மன்னார் - பூநகரி வீதியில் பள்ளமடுவை இலக்கு வைத்து நகரத் தொடங்கியுள்ளன.
அடம்பன் சந்தியிலிருக்கும் படையினர் ஆண்டான்குளம், ஆட்காட்டிவெளி ஊடாக பள்ளமடுவுக்குச் செல்ல முயல்கின்றனர். அதேநேரம், மடுவிலிருந்து பாலம்பிட்டி சந்திக்குச் சென்றுள்ள படையினர் அங்கிருந்து மேலும் வடமேற்கே முன்நகர்ந்து பெரியமடுவுக்குச் சென்று அங்கிருந்து பள்ளமடுவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இவ்விரு படையணிகளதும் முன்நகர்வு முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்ச் சமரில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் - பூநகரி வீதியில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் தற்போது படையினர் நிலை கொண்டிருந்தாலும் அந்த வீதியால் பாரிய படைநகர்வுகளை மேற்கொண்டு பள்ளமடுவுக்குச் செல்ல முடியாத நிலை படையினருக்குள்ளது. இந்த வீதியின் (ஏ32) இரு மருங்கும் பாரிய படைநகர்வுக்கு சாதகமற்றவை. `ஏ32' வீதியின் இடப்புற கடற்கரைப் பக்கமானது சதுப்பு நிலமானது. வீதியின் வலப்புறமானது பெரும் திறந்த வெளிகளைக் கொண்டதுடன் கடும் வரட்சியானது. பாரிய படைநகர்வு நீண்ட நாட்களை எடுக்கும் போது இங்கு குடிநீர் பிரச்சினை பூதாகரமாயிருக்கும். இதனால், இந்தப் பிரதான வீதியூடாக படைநகர்வை தவிர்க்கும் படையினர் உட்புறமூடாகவே இந்த வீதிநோக்கிய படைநகர்வில் ஈடுபட்டுள்ளனர்.
மடுவை நோக்கிய நகர்வும் அடம்பன் நோக்கிய நகர்வும் மிக நீண்ட நாட்களாய் பலத்த இழப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டதென்றாலும் தாங்கள் அந்தந்த இலக்குகளை அடைந்துவிட்டதால் அந்தந்த இடங்களிலிருந்து அடுத்தடுத்த இலக்குகள் நோக்கிச் சென்றுவிட முடியுமெனப் படைத்தரப்பு நம்புகிறது. இதுவரை இந்தப் பகுதியிலிருந்த களமுனையுடன் ஒப்பிடுகையில் இனிவரப் போகும் களமுனை, மாறுபட்டது. இதுவரை பொட்டல் காடுகளைக் கொண்ட களமுனையில் புலிகளைச் சந்தித்த படையினர் இனி திறந்த வெளிக் களமுனையில் புலிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
எனினும், மன்னாருக்கு வடக்கேயுள்ள இந்தக் களமுனை படையினருக்கு மிகவும் பாதகமாகவே இருக்கப் போகிறது. திறந்த வயல் வெளிகளைக் கொண்ட களமுனையில் பல கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னேறுவதென்பது மிகவும் சவால்மிக்கது. படையினர் இனி முன்னேற முயலும் அனைத்துப் பகுதிகளும் பரந்துபட்ட வயல்வெளிகளாகவே இருக்கப் போகிறது. இதனால், முன்னேற முயலும் படையினர் மீது மிக இலகுவாகவும் மிக மோசமாகவும் தாக்குதலை நடத்தக் கூடிய வகையில் திறந்த வெளிகளைக் கொண்ட களமுனையிலேயே படைநகர்வை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மிக நீண்டதூர ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களை தங்கள் வசம் வைத்திருக்கும் புலிகளுக்கு இந்தத் திறந்தவெளிக் களமுனையில் படையினரைத் தாக்குவது மிகவும் வாய்ப்பாயிருக்கப் போகிறது. புலிகளின் கடுமையான ஆட்லறித் தாக்குதலிலிருந்தும் மோட்டார் தாக்குதலிலிருந்தும் சிறிய ரக ஆயுதங்களது தாக்குதலிலிருந்தும், இவ்வாறானதொரு திறந்த வெளிக்களமுனையில் பாதுகாப்பைத் தேடுவது படையினருக்கு மிகவும் கடினமாயிருக்கும்.
இதனால், இனி மன்னார் களமுனையானது திறந்தவெளிப் போரரங்காகவே இரு தரப்புக்குமிருக்கப் போகிறது. பெருமெடுப்பில் முன்னேற முயலும் படையினர் புலிகளின் நேரடித் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். படையினரும் ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், மோட்டார்கள், கனரக ஆயுதங்களென தங்களது அனைத்து வகையான ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் இந்தக் களமுனையில் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
மேலும், இந்தத் திறந்தவெளிக் களமுனையில் கவசப் படையணிகளை முன்நகர்த்தி அவற்றின் பின்னால் பதுங்கியவாறே, படையினர் முன்நகர்வை மேற்கொள்ள முனைவர். இதனால், இந்தக் களமுனையில் கவசப் படையணிகளது தேவை அதிகமிருக்கப் போகிறது. அதேநேரம், திறந்த வெளிக் களமுனையில் காவலரண்களை அமைத்து அவற்றிலிருந்து தாக்குதல் நடத்துவது சாத்தியமற்றது. கனரக ஆயுதங்கள் மூலம் இவ்வாறான காவலரண்களைத் தகர்த்துவிட முடியுமென்பதால் திறந்த வயல்வெளிகளில் பாதுகாப்புத் தேடுவதென்பது எந்தத் தரப்புக்கும் சாத்தியமற்றது.
இவ்வாறானதொரு களமுனையில் தாக்குதல் அணியும் தற்காப்பு அணியும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கையில் இங்கு தாக்குதலை நடத்துபவர்களை விட தற்காப்பு அணியினருக்கே வாய்ப்புகள் அதிகம். திறந்த வயல்வெளிகளில் கண்ணிவெடிகள், மிதிவெடிகளைத் தாண்டி வேகமாக முன்னேறுவதென்பது சாத்தியமற்றது. ஏற்கனவே மன்னார் களமுனையில் திறந்த வெளிக்களமுனைகளில் முன்னேறிய படையினர் புலிகளின் சினைப்பர் தாக்குதல் அணியிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, முன்னேறும் பகுதிகளில் பனையோலை வேலிகளால் தங்களை மறைத்தவாறே படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
திறந்தவெளிக் களமுனையில் முன்னேறும் படையினர் எதிர்த் தரப்பின் பல்வேறு தாக்குதல் உத்திகளிலிருந்தும் தங்களைப் பாதுகாத்தவாறு முன்னேற, பல்வேறு தந்திரங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கவசப் படையணிகளை எதிர்கொள்வதற்காக டாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகளும், நிலக் கண்ணிவெடிகளும் புதைக்கப்பட்டிருக்கும். இவற்றைத் தேடிப் பிடித்து அழித்துக் கொண்டு முன்நகர முயலும் போது டாங்கி எதிர்ப்பு படையணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவ்வாறான களமுனையில் புலிகளின் சினைப்பர் தாக்குதல் அணிகளை எதிர்கொள்வது படையினருக்கு மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கும். ஒருபுறம் சினைப்பர் தாக்குதல் அணிகளை எதிர்கொள்கையில் மறுபுறம் மிதிவெடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கும். மிதிவெடிகள், கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டு நீண்ட தூர ஆட்லறிகள், மற்றும் மோட்டார் குண்டுகளைப் பொழிந்து படையினரை பொறிக்குள் சிக்கவைக்கும் திட்டங்களையும் புலிகள் தயாரித்திருப்பர். இது, சாதகமற்றதொரு களமுனையில் பாரிய இழப்புகளையும் பெரும் பின்னடைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
தற்போதைய நிலையில் அடம்பனிலிருந்து ஆண்டான்குளத்தைநோக்கி நகரும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் படையணிகளுக்கு உதவியாக உயிலங்குளம் பகுதியிலிருந்தும் படைநகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தங்களுக்கு சாதகமற்ற களமுனைகளில் ஒரே நேரத்தில் மூன்று நான்கு யுத்தமுனைகளைத் திறந்து ஒரேநேரத்தில் நகர்ந்து புலிகளை பொறிக்குள் சிக்கவைத்து பின் பெரியதொரு நிலப் பிரதேசத்தை பலத்த இழப்புகளின்றி மீட்கும் திட்டங்களையும் கடைப்பிடிக்க படையினர் முற்படுகின்றனர்.
தற்போதைய நிலையில் `ஏ32' வீதியில் பள்ளமடுவை இலக்கு வைத்தே பாரிய படை நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடம்பனிலிருந்து ஆண்டான்குளம் - ஆட்காட்டி வெளி சென்று பள்ளமடு நோக்கி 58 ஆவது படையணி நகர்கையில் மடுவிலிருந்து பாலம்பிட்டி - பெரியமடு ஊடாக பள்ளமடு நோக்கிச் செல்ல 57 ஆவது படையணி முயல்கிறது. இவ்விரு படைநகர்வுகளுக்கெதிராகவும் புலிகள் தற்போது கடும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். படையினரின் ஒவ்வொரு பாரிய நகர்வும் புலிகளைப் பொறிக்குள் சிக்க வைப்பவையாகவே இருப்பதால் புலிகளும் மிகத் தந்திரமாகவே தங்கள் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
மன்னார் களமுனையில் பலத்த இழப்புகளுக்கு மத்தியிலேயே பாரிய படைநகர்வுகள் நடைபெறுகின்றன. தினமும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுவதுடன், 20 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து களமுனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகின்றனர்.
அத்துடன், முன்னேறும் இடங்களையும் விநியோகப் பாதைகளையும் தக்கவைக்க வேண்டுமென்பதால் படையினரின் தேவை தினமும் அதிகரித்தே செல்கிறது. ஆனாலும், களமுனையில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் விதத்தில் படைகளுக்கு புதிதாக ஆட்களைத் திரட்ட முடியாதுள்ளதால் வேறு களமுனைகளிலிருந்தே அவசரத்திற்கு படையினரைத் தருவிக்க வேண்டியுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் படையணியில் சேர்த்து ஆட் பற்றாக்குறையை ஈடுசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்தில் 4000 பேர் வரை சரணடைந்துள்ளதாக படைத்தரப்பு கூறினாலும் அந்த எண்ணிக்கை மிகக் குறைவு. புதிதாக படைகளில் இணைவோரின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுவதால் களமுனைத் தேவைக்கேற்ப படையினரின் எண்ணிக்கையில்லையென்பதே உண்மை. இதனால், வேறிடங்களிலிருந்து படையினர் களமுனைக்கு அனுப்பப்படும் நிலையேற்பட்டுள்ளது.
மூதூர், கிண்ணியா பகுதியின் பாதுகாப்பு இதுவரை இராணுவத்தினர் வசமிருந்தது. தற்போது அங்கிருந்து இராணுவத்தினர் வன்னிக் கள முனைக்கு அனுப்பப்பட, கிண்ணியாவின் பாதுகாப்பு விமானப் படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யுத்தமுனையில் தேவை அதிகரிக்க கிழக்கிலிருந்து படையினரை வன்னிக்குத் தருவிக்கும் நிலையேற்படப் போகிறது. எனினும், மட்டக்களப்பில் தமிழ் - முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் அங்கு நிலைமையை மோசமடையச் செய்துவிடலாமென்பதால் அங்கு படையினரின் தேவை அதிகரித்துள்ளது. இது வடபகுதி போர் நடவடிக்கையை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.
இதேநேரம், வன்னிப்போர் முனையில் புலிகளின் தாக்குதல் உத்திகளும் தாக்குதல் திறனும் மாறுபட, படையினரும் தங்கள் தாக்குதல் உத்திகளை மாற்றியமைத்து வருகின்றனர். முன்னைய காலங்களைப் போல் எடுத்தற்கெல்லாம் பாரிய படைநகர்வென்றில்லாது தற்போது தங்கள் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து சிறுசிறு குழுக்களாகச் செல்லும் படையினர் புலிகளின் பகுதிகளுக்குள் நுழைந்து கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், முன்னரங்க நிலைப் பகுதிகளில் கடும் மோதல்கள் நடைபெறும் அதேநேரம், முன்னரங்க நிலைகளுக்கப்பால் சிறு சிறு மோதல்களும் நடைபெறுகிறது.
மேலும், களமுனைகளுக்கு புலிகளின் கட்டளைத் தளபதிகள் வருவதைத் தடுக்கும் நோக்கில் ஆழ ஊடுருவும் படையணியினரை வன்னிக்குள் அனுப்பி பிரதான பாதைகளில் கிளைமோர் தாக்குதல்களையும் நடத்தி ஒருவித அச்ச நிலையையும் ஏற்படுத்த முற்படுகின்றனர். புலிகளின் வாகனங்களுக்கென்றில்லாது அனைத்து வாகனங்கள் மீதும் ஆழ ஊடுருவும் படையணியினர் இவ்வாறான தாக்குதல்களை நடத்தி பொது மக்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி மக்களை உளவியல் ரீதியில் பாதிப்படையச் செய்வதுடன், புலிகளின் பகுதிக்குள் எங்கும் எப்போதும் ஊடுருவி எவ்வாறான தாக்குதலையும் நடத்தக் கூடிய வல்லமையுடன் இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கமாகும்

No comments:
Post a Comment