Saturday, 24 May 2008

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 3007 மில்லியன் ரூபா ஊழல் மோசடி

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்காக உரிமையாளருக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகை எனக் கூறி பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையினால் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுத் தொகையாக 3007 மில்லியன் (3007,034,646) ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், 2008-04-10 என்ற திகதியிடப்பட்ட 250749ம் இலக்க காசோலை எழுதப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த காசோலை மக்கள் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும், ஹம்பாந்தோட்டை மக்கள் வங்கி கிளைக்கு இந்தப் பணம் கிடைக்கப் பெறவில்லை என வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார்.

மேலும், நட்டஈட்டுக் கொடுப்பனவுகளுக்காக 2008-04-11 என்ற திகதியிடப்பட்ட 2305,650 ரூபாவிற்கான 250889ம் இலக்க காசோலை கிடைக்கப் பெற்றதாகத் தெரியவருகிறது.

மே மாதத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான காசோலை காணி நட்டஈட்டுக் கொடுப்பனவுகளுக்காக கிடைக்கப் பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தினால் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களுக்கு சுமார் 575 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் கணேச அமரசிங்க தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தின் பிரதான பொறியியலாளர் அலுவலகமும் சுமார் 600 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

50 காணிகளைத் தவிர்ந்த ஏனையோருக்கு ஏற்கனவே நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.
375 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தின் பிரதான பொறியியலாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த நிலைமையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தினால் பாதிப்படையும் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்க 3007 மில்லியன் ரூபா கசோலை வரையப்பட்டுள்ளதாக ராவய சுட்டிக்காட்டுகின்றது.

இது குறித்து துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமரதுங்கவை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவர் வெளிநாடு சென்றிருப்பதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

மேலும், துறைமுக அதிகாரசபையின் நிதிப் பணிப்பாளர் சிரானி வன்னியாரச்சியிடம் இது குறித்து விசாரித்த போது ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க முடியாதென பதிலளித்துள்ளார்.

No comments: