
கிழக்கில் வளங்களை சூறையாடுவதற்கு பிள்ளையானை முதலமைச்சராக்கியுள்ள இந்தியா, வடக்கில் வளங்களை சூறையாட இடைக்கால நிர்வாக சபையினை நிறுவுவதற்கு முயற்சித்து வருகின்றது என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவின் அடிமைத் தனமான அரசாங்கமாக இலங்கை அரசு மாறியுள்ளது. எனவே இனியும் பொறுமை காக்க முடியாது. தேசப்பற்றுள்ள புதிய அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய நிலை குறித்து கேசரிக்கு வழங்கிய விசேட பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் ரில்வின் சில்வா மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் அரசாங்கம் இன்று இந்தியாவின் அடிமைத்தனமான அரசாங்கமாக மாறியுள்ளது. எனவே தான் எமது படையினர் மீட்டெடுத்த கிழக்கு மாகாணத்தில் அம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து படிப்படியாக ஜனநாயகத்திற்குள் அவர்களை கொண்டு வராது திடீரென இந்தியாவின் தேவைக்கு கிழக்கின் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது.
அத்தோடு ஜனாதிபதி ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்தியாவின் தேவைக்கேற்ப பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். எமது படையினரால் மீட்கப்பட்ட சம்பூர் பிரதேசத்திற்கு எவராலும் உட்புக முடியாது. அங்கு வாழ்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மீளக் குடியேற்றப்படவில்லை.
மாறாக 2000 ஏக்கர் காணி அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் எண்ணெய்க் குதங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று அப்பிரதேசத்திலுள்ள இரும்புகள் வெட்டப்பட்டு இந்தியாவிற்கு அனுப்ப தயார் செய்யப்படுகின்றன. திருகோணமலை துறைமுகமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இனி கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானை பயன்படுத்தி அனைத்து வளங்களையும் இந்தியா ஆக்கிரமித்து விடும். இதேபோன்று வடக்கிலும் வளங்களை ஆக்கிரமிப்பதற்காக இடைக்கால நிர்வாக சபையை நிறுவ வேண்டுமென அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை இந்தியா ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு முன்னோடியாக அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். இலங்கையில் சீமெந்து தட்டுப்பாட்டை போக்குவதற்கு காங்கேசன்துறை சீமெந்து கம்பனியை இந்தியா டாட்டா பிர்லா கம்பனிக்கு வழங்க வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார். இவையெல்லாம் வடக்கில் வளங்களை சூறையாடும் இந்தியாவின் திட்டத்தின் ஆரம்பக் கட்ட நகர்வுகளாகும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேவை எழுந்துள்ளது. இதற்காக ஐ.தே.க. கட்சியுடன் நாம் பேசப் போவதில்லை. தற்போது புத்திஜீவிகள், கலைஞர்கள் என பல்வேறு அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.தற்போது தேசிய கொள்கையை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் அரசாங்கத்தின் நாட்டை பிரிக்கும் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளையும் வடக்கில் இடைக்கால நிர்வாக சபை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களையும் தடுத்து நிறுத்துவோம். மக்களை ஒன்று திரட்டி பாதயாத்திரைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவோம். ஒரு போதும் இலங்கையின் வளங்களை சுரண்டுவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.
Monday, 19 May 2008
இடைக்கால சபையின் மூலம் வடக்கில் வளங்களைச் சுரண்ட இந்தியா முயற்சி - ஜே.வி.பி. குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment