Monday, 26 May 2008

கையூட்டு வழங்கி உள்நாட்டு பிரச்சினைகளிலிருந்து தப்பினாலும் காட்டர், டுட்டு போன்றோருக்கு இதனை செய்ய முடியுமா?

* சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது; சுட்டிக்காட்டுகிறது ஐ.தே.க.

ரொஷான் நாகலிங்கம்

தோல்விகளை மூடி மறைப்பதில் அரசாங்கம் காலத்தை வீணடிக்காது மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்ததுடன், ஐ.நா.வில் ஏற்பட்ட தோல்விக்காக அரசு வெட்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;

"இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவே மனித உரிமைகள் பேரவைத் தேர்தலில் இலங்கை தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

ஜனாதிபதிகளான ஜயவர்த்தனா, பிரேமதாஸா, சந்திரிகா ஆகியோரின் காலப்பகுதியிலும் யுத்தம் நடைபெற்றது. அக்காலப்பகுதியிலும் மனித உரிமைகள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் முகம் கொடுத்து சிந்தித்து செயற்பட்டதன் விளைவாக இவ்வாறான தோல்வி நிலை ஏற்படவில்லை.

தற்போது ஏற்பட்ட தோல்வியானது நாட்டுக்கல்ல, அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகும். இதற்காக அரசே வெட்கமடைய வேண்டும். தேர்தலின் முன்னரே டெஸ்மண்ட், டுட்டு, ஜிம்மிகாட்டர் போன்றவர்கள் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் எந்த முன்னேற்றமுமில்லையினால் எதிர்த்து வாக்களிக்குமாறு கோரியிருந்தனர்.

அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு உள்ளூரிலுள்ளவர்களுக்கு கையூட்டு செய்து பிரச்சினைகளிலிருந்து தப்பமுடியும். ஆனால், ஜிம்மிக்காட்டர் மற்றும் டுட்டு போன்றவர்களுக்கு இதை செய்ய முடியாது. இதனால் சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்ற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது.

எதிர்காலத்தில் மனித உரிமைகளை உரிய முறையில் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மீண்டும் அடுத்த தெரிவின் போது வெற்றியை இலங்கை பெறமுடியும். அதனை அரசாங்கம் செய்யவேண்டும்.

வியாழன் இரவு நேசன் உதவி ஆசிரியர் கடத்தப்பட்டு நேற்றுக் காலையில் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் அதிகரித்துச் செல்லும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாட்டுக்கான சர்வதேச உதவிகள் தடைப்படும் ஆபத்து எழுந்துள்ளது.

17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசு அமுல்படுத்தாது கிழக்கில் ஊழல் மோசடி மிக்க தேர்தலை நடத்தி துஷ்பிரயோகம் மூலம் நியமிக்கப்பட்டவரே அங்கு முதலமைச்சராகியுள்ளார். இதனை நாட்டு மக்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றதனால் சர்வதேச உதவிகள் நிறுத்தப்படும் ஆபத்து அதிகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இன, மதம் மற்றும் பேதங்கள் பார்க்காது ஆரம்பம் முதல் செயற்படும் கட்சியாகும். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட்டு வந்தது. அது தற்போது சீர்குலைந்துள்ளது.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இன ஐக்கியம் முக்கியமானதாகும். இந்த அரசு தெற்கு சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களை குறிவைத்து அரசியல் நடத்துவதால் இனங்களுக்கிடையில் ஐக்கியம் சிதைந்துள்ளது.

எனவே, நாட்டை பாதுகாக்க தெற்கு சிங்கள மக்கள் உட்பட அனைத்து இன மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டும். இதன் மூலமும் நாட்டை புதிய பரிணாமத்துக்கு இட்டுச் செல்லமுடியும்" என்றார்.

No comments: