Thursday, 8 May 2008

விடுதலைப் புலிகள் இணங்கினாலே இந்தியா தலையிடும்- பகவதி

விடுதலைப் புலிகள் இணங்கிக்கொண்டாலே இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா தலையிடும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி, எனினும், தமிழகத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் அதற்கு இணங்குவார்களா என்பது சந்தேகத்துக்குரியது எனக் கூறியுள்ளார்.

ஆசிய பிராந்தியத்தில் நீண்டகாலமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது. எனினும், அப்பாவிப் பொதுமக்கள் மேலும் கொல்லப்படுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லவேண்டும் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் இணங்காவிட்டால் இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடுவதில் எந்தப் பயனும் இல்லை. அதையும்மீறி இந்தியா தலையிட்டால் விடுதலைப் புலிகள் தமிழ் என்பதாலும், தமிழகத்திலுள்ளவர்கள் தமிழர்கள் என்பதாலும் அது எதிர்மறையான விளைவைத் தோற்றுவித்துவிடும்” என பகவதி கூறியுள்ளார்.

இலங்கையில் சமூகங்களுக்கிடையில் சுமுகமான உறவுநிலை இல்லை. இதன் காரணமாகவும் நீண்டகாலமாக மோதல்கள் தொடர்ந்து வரலாம். “இலங்கை மிகவும் சிறியதொரு தீவு. துரதிஸ்டவசமாக அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், இலங்கையிலுள்ள சமூகங்கள் ஒற்றுமையுடன், பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவருடைய மதமும் மதிக்கப்பட வேண்டும்” என அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் ஆயுத ரீதியான தீர்வைக் கைவிடவேண்டும். வன்முறைகள் ஒருபோதும் தீர்வொன்றைத் தராது. மோதல்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டிருப்பதால் இரண்டு தரப்பினரும் சமாதானமான பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டுமென இந்தியாவின் முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவை அழைக்கும் நோக்கம் இல்லை- இலங்கை சமாதானச் செயலகம்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் தலையிடுமாறு இந்தியாவை அழைக்கும் நோக்கம் எதுவும் இலங்கைக்கு இல்லையென இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத் தலைவர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

“1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட அனுபவத்தின் பின்னர் இந்தியாவை அழைக்கும் நோக்கம் எதுவும் இல்லை. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அனுசரணையாளர்களாகக் கடமையாற்றவருமாறு இந்தியாவை அழைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கும் இல்லை” என அந்த ஊடகத்துக்கு ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு சமாதானத்தை அடையமுடியுமென்ற தெளிவான திட்டமொன்றை அரசாங்கம், நோர்வேயிடம் கோரியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், நோர்வேயின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள அனுமதி கோரியிருப்பதாகவும், அந்த விஜயத்தின் போது நோர்வேயின் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்படுமெனவும் ரஜீவ விஜயசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments: