Sunday, 25 May 2008

அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தலைவர் மீது தாக்குதல்: ஏறாவூரில் ஹர்த்தால்

அட்டாளைச்சேனை பிரதேசசபை தலைவர் மசூர் சின்னலெப்பை அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான தாக்குதலுக்குள்ளான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களாலேயே இவர் தாக்கப்பட்டிருப்பதாக பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.

இதேவேளை, ஏறாவூரில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து ஏறாவூரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் ஏறாவூர் பகுதியின் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 22ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஏறாவூரைச் சேர்ந்த காசிம் லெப்பை (37) மற்றும் அப்துல் ஹாசிம் ஹனீர் (19) ஆகிய இருவரும் கடத்திச்செல்லப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாலேயே கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளபோதும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதனை மறுத்துள்ளனர்.

இது குறித்து மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் உறுப்பினர் சுபையிர் பிள்ளையான் அணியின் பிரதேச முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தி இருந்தார்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட இருவரும் நேற்று மே24 விடுவிக்கப்படுவார்கள் என பிள்ளையான் அமைப்பின் மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் உறவினர்களிடம் உறுதி அளித்திருந்தார்.

எனினும் இவர்கள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லைஇந்த நிலையில் ஏறாவூர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தப் பகுதியின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதுடன், போக்குவரத்துப் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: