பிருந்தா `நேஷன்' பத்திரிகையின் பிரதி ஆசிரியரான கீத் நொயர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், விடுவிக்கப்பட்டுவிட்டாரென்பதால், அவர் உயிருடன் திரும்பியிருக்கிறார் என்பதைத் தவிர அங்கு திருப்திபட்டுக்கொள்வதற்கு என்று ஒன்றும் கிடையாது. இதற்குக் காரணம் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ந்து விழுந்துவரும் அடிகளே. இதேபோல், நொயர் உயிருடன் விடுவிக்கப்பட்டார் என்பதை தவிர இச்சம்பவத்தில் திருப்திப்பட வேறொன்றுமில்லை என்பதற்கு காரணமும் அவர் மீது விழுந்திருக்கும் பலமான அடிகள்தான். நொயரை கடத்தியவர்கள், அவர் உயிர் மட்டும் இருக்க, முடிந்த வரை தாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தாக்கியதுபோல், அவரது முகம் தொடக்கம் கை, கால்கள் என்று உடல் அங்கங்கள் ஆங்காங்கே தழும்புகளுடன் தடித்து காணப்படுகின்றன. தலைப் பகுதி மற்றும் காதுகளிலும் காயமேற்பட்டிருப்பதுடன், காதிலிருந்து இரத்தம் கசிவதாகவும் கூறப்பட்டது. கீத் நொயர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டு அடுத்த 7 1/2 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதாவது மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் அவர் வீடு திரும்பியிருந்தார். பிரபல ஆங்கில பத்திரிகையொன்றின் பிரதி ஆசிரியராகவும் பாதுகாப்பு தொடர்பான பத்தி எழுத்தாளராகவும் இருக்கும் நொயர், கடத்தப்பட்டதற்கும் கடுமையாக தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதற்கும் கட்டாயம் பின்னணிக் காரணமோ அல்லது நோக்கமோ இல்லாமலிருக்க முடியாது. எவ்வாறிருப்பினும், கடத்தல்காரர்களின் அதாவது நொயரை கடத்தும் படி உத்தரவிட்டவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பதை அவர்கள் மட்டுமே அறிவர். கடத்தப்பட்ட தினத்தன்று கீத் நொயர் தனது இரவு வேளை உணவை டுப்ளிக்கேஷன் வீதியிலுள்ள ஒரு உணவகத்தில் நேஷன் பத்திரிகையின் ஆசிரியரான லலித் அலகக்கோன் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கிரிஷாந்த குரே இருவருடனும் சேர்ந்து அருந்திவிட்டு, இரவு 9.45 மணியளவில் அவர்களிடமிருந்து விடைபெற்று தெகிவளை வைத்தியா வீதியிலுள்ள தனது வீடு நோக்கி காரில் பயணமாகியுள்ளார். நேரம் இரவு 10 மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளை தனது வீட்டை அண்மித்த நொயர், வீட்டு நுழைவாயில் கதவை திறந்துவைக்குமாறு கையடக்கத் தொலைபேசி மூலம் தனது மனைவிக்கு தெரிவித்திருக்கிறார். மனைவியும் நுழைவாயில் கதவு திறப்பை திறந்து வைத்துவிட்டு வீட்டினுள்ளே காத்திருந்தபோதும், நொயர் உள்ளே வராததை அடுத்து சந்தேகத்தின் பேரில் வெளியில் வந்து அக்கம் பக்கம் பார்த்தபோதே நொயரது கார் மட்டும் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, அவர் அங்கு இருக்கவில்லையென நேஷன் பத்திரிகையின் ஆசிரியரான லலித் அலகக்கோன் தெரிவித்தார். என்ஜின் இயங்கிக் கொண்டிருக்க, சாவியும் காரில் பொருத்திய இடத்திலேயே இருக்க, கதவும் திறந்திருந்த நிலையில் கார் மட்டும் அங்கு இருந்திருக்கிறது. இதனையடுத்து, மனைவி தெரிந்தவர்களுடன் தொடர்புகொண்டு சம்பவத்தை தெரிவிக்கவே ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உடனடியாக கீத் நொயரின் தெகிவளை வீட்டுக்கு விரைந்துள்ளனர். பின்னர் இரவு 11.30 மணியளவில் நொயரின் மனைவியால் சம்பவம் தொடர்பாக தெகிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது பாதுகாப்பு செயலாளருடனும் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் பேசப்பட்டதாக லலித் அலகக்கோன் தெரிவித்தார். அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளின் பின்னர் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியிருக்கின்றன. பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 3 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையக பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபரான என்.கே.இலங்கக்கோன் வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து தெரிவித்திருந்தார். பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைக்கு இடையே நொயரின் வீட்டில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள், அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றனர். அதன்போது, அழைப்புத் தொடர்பு ஏற்பட்டபோதும் மறுபுறத்தில் பதிலளிக்காமலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அழைப்பு சென்ற பிரதேசமெதுவென்று கையடக்கத்தொலைபேசி நிறுவனத்தின் உதவியுடன் கண்டறிந்து, பொலிஸாருக்கு அதை தெரிவித்து அப்பிரதேசத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை சோதனையிடவும் முயற்சிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், ஊடகவியலாளர் அணியொன்றும் அங்கு விரைந்திருக்கிறது. இவையெல்லாம் நடந்துகொண்டிருந்ததற்கு மத்தியில், கடத்தல்காரர்கள் நொயரை தெகிவளை பகுதியில் காலி வீதியில் இறக்கிவிட்டு சென்றிருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவிலேயே நொயரை கடத்தல்காரர்கள் விடுவித்திருந்தனர். பின்னர் நொயர் ஒருமாதிரியாக சமாளித்து நடந்தே தனது வீட்டைச் சென்றடைந்திருக்கிறார். இதனையடுத்தே, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நொயர் காரிலிருந்து இறங்கி வீட்டின் நுழைவாயில் கதவை திறக்க முற்பட்ட நேரமே அவர் கடத்தப்பட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கடத்தியவர்கள் சரியான தகவல்களுடன் நன்கு திட்டமிட்டே அவரை கடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பது மட்டும் இவ்விடயத்தில் புலனாகிறது. காரணம் குறுகிய நேரத்திற்குள் அங்கு அத்தனையும் நடந்து முடிந்திருக்கிறது. இதேநேரம், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை எழுதுவதாலேயே நொயர் கடத்தப்பட்டிருக்கலாமென நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் அழகக்கோன் சுட்டிக்காட்டினார். அத்துடன், நொயருக்கு கடந்த காலங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் இதனால் அவர் தனது மனைவி, பிள்ளைகளின் பாதுகாப்பில் கூட சிரத்தை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல், நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து 5 ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து விடுத்திருக்கும் அறிக்கையில் கூட, கடந்த காலங்களில் நொயருக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததாகவும் அதனால் அவருக்கு தனது பாதுகாப்பு தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஊடகவியலாளர்களை சுட்டுக் கொன்றனர் அல்லது கடத்திச் சுட்டுக் கொன்றனர். ஆனால், நொயர் கடுமையாக தாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதுவே அவரது குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் போதுமென்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிற போதிலும், கடத்தல்காரர்கள் இதன்மூலம் சொல்லவரும் செய்தி என்னவென்ற கேள்வியும் இங்கு தொக்கி நிற்கிறது. அதாவது கடத்தல்காரர்கள் தங்களது நோக்கம் நிறைவேறிவிட்டதா அல்லது ஊடகங்களை தங்களுக்கு இப்படியும் மிரட்ட முடியும் என்று காட்டுவதற்காக இவ்வாறு செயற்பட்டார்களா என்று தெரியவில்லை. இதுவே இறுதி சம்பவமாக இருந்துவிட்டால் எவருக்கும் பிரச்சினையில்லை. ஆனால், இனிமேலும் இது தொடராது என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாது. குற்றவாளி யாரென்பதை கண்டறிய பொலிஸார் நொயரின் வாக்குமூலத்திற்காக காத்திருக்கின்ற போதிலும், கடத்தியவர்கள் தங்களை சரியாக நொயரிடம் அடையாளம் காட்டியிருப்பார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்த கடத்தல் சம்பவமானது எவரால் செய்யப்பட்டிருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதுமாகுமென்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு முன்னரும் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினாலேயே இன்னும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்திலுள்ள அமைச்சரொருவரே அரச ஊடகத்தினுள் புகுந்து செய்த அடாவடித்தனம் தொடர்பாக இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருக்கும் நிலையில், நொயரின் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து சட்டத்துக்கு முன்னிறுத்துவதில் அரசாங்கம் எவ்வளவு தூரம் அக்கறை காட்டுமென்பதை புரிந்துகொள்வது சிக்கலே. இதேநேரம்,`நொயர் வடக்கில் நடக்கும் யுத்தம் பற்றி சுயாதீனமாக தெளிவுபடுத்தி தகவல்களை வெளியிடுவதைத் தவிர கடத்துவதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. அவரது எழுத்தாக்கங்கள் பெரும்பாலும் யுத்தம் தொடர்பான அரசின் அணுகுமுறைகள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பாக விமர்சனம் செய்வதாகவே இருக்கும்ீீ என்று ஊடக அமைப்புகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் விரல் எத்திசை நோக்கி நீட்டப்படுகிறது என்பதைக் கண்டறிவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. எது எவ்வாறிருப்பினும், இச்சம்பவம் பற்றி உரிய விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டுமே இந்த மிலேச்சத்தனமான செயற்பாட்டினால் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியிலிருந்து அரசு விடுதலை பெற முடியுமென்றும் ஊடக அமைப்புகள் ஐந்தும் சுட்டிக்காட்டியுள்ளன. ஜனாதிபதியும் விசேட விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருப்பதால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடத்தல்காரர்களுக்கும் அவர்களை ஏவி விட்டவர்களுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது என்பதை அனைவரும் அறிவர். எப்படியோ கீத் நொயரின் விடயம் தொடர்பாகவாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து, இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதற்கு முற்றுப்புள்ளியொன்றை வைக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலையும் கேள்விக் குறியுடன் மட்டும் முடித்துக்கொள்ளும் நிலைமையே இன்னும் எம்மைச் சுற்றி இருக்கிறது.
Sunday, 25 May 2008
பத்திரிகை ஆசிரியர் மீதான தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார்?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment