இலங்கையில் தற்போது பரவலாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்று, ஜீ.எஸ்.பிளஸ் எனும் ஆடை ஏற்றுமதிச் சலுகையாகும்.
ஐரோப்பிய யூனியனால் முன்னிலைப்படுத்தப்படும், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டிற்கும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கும் இடையில் உரசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜீ..எஸ்.பி. (Generalised System of Preferenced) பிளஸ் இனை அனுபவிக்க முடியாதவாறு, தொழிலாளர் நல உரிமை மற்றும் பொதுப்படையான மனித உரிமைகள் யாவும், இலங்கையின் அந்நிய செலவாணி வருமானத்திற்கு வேட்டு வைக்கத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், மனித உரிமை மீறல்களை முன்வைத்து, இச்சலுகையினை ஐரோப்பிய யூனியன் இரத்து செய்யுமென்று கூற முடியாது.
அரசின் மீது ஏதாவதொரு வகையில் அழுத்தத்தை திணிப்பதற்கே, ஜீ.எஸ்.பி. பிளஸ் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் கருத இடமுண்டு.
இதேவேளை, உள்நாட்டிலும் இதுகுறித்த முரண்பாடுகளும் உருவாக ஆரம்பித்துள்ளதை அவதானித்தல் வேண்டும்.
இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தினால் (Employers Federation of Ceylon) ஒழுங்கமைப்பட்ட கூட்டத்திற்கு, தொழிற்சங்கத்தினூடாக தொழிலாளர்கள் பங்கு கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆடை உற்பத்தியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர்களின் பங்களிப்பு குறித்து சர்வதேச சங்கங்கள் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கைக்கு வருகை தந்த, ஐரோப்பிய யூனியனின் குழுவிற்கு தலைமை வகித்த ஜூலியன் வில்சனும் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
அதாவது 27 ஆவது சர்வதேச மனித உரிமை மாநாட்டில், கூறப்பட்ட தொழிலாளர் உரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை இலங்கை அரசு பேணுவதன் அடிப்படையிலேயே ஜீ.எஸ்.பீ.பிளஸ் தொடர்வது தீர்மானிக்கப்படுமென்பதை வில்சன் வலியுறுத்தினார்.
இச் சர்வதேச அங்கீகாரம் பெற்ற விடங்கள் சட்டமாக மட்டும் இருக்காமல், நடைமுறையிலும் இருக்க வேண்டுமென்பதே அவரின் வேண்டுகோள்.சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அன்ரன் மாக்கஸும் நடைமுறைப்படுத்தப்படாத இச்சட்டங்கள் குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும், தொழிலாளர் உரிமையினை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பின் பிரதிநிதியான ஜெவ். வொட்டும் அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. பற்றி பிரஸ்தாபித்துள்ளார்.
இவர் சட்டவாக்கப்பிரிவின், சர்வதேச பொருளாதார கொள்கை திட்டமிடலிற்கான வல்லுனராவார்.
அமெரிக்க ஜீ.எஸ்.பி. யினை நீடிப்பதற்கான அடுத்த அமர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
இது ஒருவகையில் ஆடை உற்பத்தியோடு தொடர்புடைய விவகாரமாக இல்லாவிடினும் தொழிலாளர் உரிமை பற்றிய சில விடயங்கள் இக்கூட்டத்திலும் முன்வைக்கப்படுமென எதிர்வு கூறப்படுகிறது.
இந்த அமெரிக்க ஜீ.எஸ்.பி. சலுகை ஊடாக, இலங்கையுடன் சேர்ந்து 130 நாடுகளிலிருந்து 3400 வரையான உற்பத்திப் பொருட்கள் தீர்வையற்ற (Duty Free) அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மொத்த ஏற்றுமதி வருமானமாக 2005 இல் 137.4 மில்லியன் டொலர்களும், 2006 இல் 143.6 மில்லியன் டொலர்களும், 2007 ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதங்களில் 116 மில்லியன் டொலர்களும், இலங்கைக்குக் கிடைத்தன.
அமெரிக்க ஜீ.எஸ்.பி. ஆனது, ஐரோப்பிய யூனியனின் “ஜீ.எஸ்.பி. பிளசை’ விட குறைந்தளவு வருமானத்தைக் கொண்டதாக இருந்தாலும், இலங்கையின் பொருளாதார நிலையோடு ஒப்பிடுகையில் அமெரிக்க வருமானம் கணிசமான பங்கினை வகிக்கிறதென்பதே உண்மையாகும்.
ஐரோப்பிய யூனியனின் பாதையில், அமெரிக்காவும், ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைகளை நிறுத்தினால், ஏறத்தாழ இரண்டு இலட்சம் தொழிலாளர் தமது வருமானத்தை இழந்து நடுத்தெருவில் வாழ்க்கை அமைக்க வேண்டிய மோசமான சூழ்நிலை உருவாகலாமென்பதே பொருளியல் ஆய்வாளர்களின் கருத்து.
ஆனாலும், ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை, எவ்வழியிலாவது இலங்கையில் நிறுவிவிட முயலும் மேற்குலகம், ஜீ.எஸ்.பீ. பிளஸ் அழுத்தம் ஊடாக, அதைச் சாதிக்க முயன்றால், இலங்கை அரசாங்கம் ஆசியவில் பெரும் வல்லரசின் பக்கம் முழுமையாகச் சாயும் நிலை ஏற்படலாம்.
இதுகுறித்த கவலை, மேற்குலகு உண்டென்பதை கவனத்தில் கொண்டால், இவ்வகையான அழுத்தங்கள் வழமைபோன்று கைகூடப்படும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
இவ்வழுத்தம் நிறைவேற்றப்பட்டால், இலட்சக்கணக்கான மக்கள் தமது இக்கட்டõன வருமானத்தை இழந்து மிக இறுக்கமான நிலையினை அரசிற்கு உருவாகும் ஏது நிலைகள் தோன்றும்.
ஆகவே, இதற்கு மாற்றீடாக, ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இருந்து இலங்கையை நீக்குவதன் ஊடாக, மென்மையான அழுத்தங்களை அதன்மீது பிரயோகித்து தொடர்ந்து ஒரு உறவினை பேண மேற்குலம் விரும்பலாம்.
தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மன், டூட்டுவின் இலங்கை குறித்த விமர்சனமும், இப்புதிய மென்மையான அழுத்தத்திற்கு வலுச்சேர்க்கும்.
இங்கு இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்கலாம். மனித உரிமை விவகாரங்களை வைத்து, அரசிற்கு அழுத்தங்களை மேற்குலகம் சுமத்தும்போது, விடுதலைப் புலிகள் மீது பல்வேறு அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.
இன்னுமொரு வருடத்திற்கு, புலிகள்மீதான தடையை இந்தியா நீடித்துள்ளது.
கடற்புலிகள், வான்புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தென்கிற வழமையான கதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் நடந்தேறும் மனித உரிமை மீறல்கள் குறித்து, உலக அமைப்புக்களும், மேற்குலகமும் ஒரே தொனியில் கண்டித்தாலும், இந்தியா என்கிற காந்திதேசம் மட்டும் வாய் திறப்பதில்லை.தமது ஜனநாயக வேடத்தை, இலங்கையில் அரங்கேற்றாத நாடாக இந்தியா இருப்பதை சர்வதேச தமிழ் மக்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.
அதாவது நில மீட்புச் சமர் ஆரம்பிக்கும் பொழுது இந்தியாவின் நிஜமும் வெளிப்படுமென்பதே பல ஆய்வாளர்களின் கருத்து.
இருப்பினும், இந்தியாவிற்கு விசுவாசமான தமிழ் தலைமைகள் கிழக்கிலும், வடக்கிலும் அதிகாரத்தில் இல்லையென்கிற கவலை இந்தியாவை வாட்ட ஆரம்பித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தல் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்காமல், மௌனம் காத்த மர்மம் இந்த அடிப்படையில்தான்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த முதல் பாரிய இன அழிப்பு, வேர் விட்டு விழுது பரப்பி இன்று முழுத்தமிழினத்தையும் காவு கொள்ளும் நிலைக்கு வந்தடைந்துள்ளது.
தன் கையே தனக்கு உதவி என்கிற காந்தியின் போதனையை மட்டும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொண்டால் போதும்.

No comments:
Post a Comment