Saturday, 17 May 2008

வேல்ஸிலிருந்து அருஷ் ”வலுப்பெறும் தாக்குதல்களும் கிழக்கின் புதிய நெருக்கடிகளும்”

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தேர்தல் “குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்டு வந்த கதையாக” மாறிவிட்டது. சர்வதேச சமூகத்தை யும், முதலீட்டாளர்களையும் கவர்ந்து இழப்ப தற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த தேர்தலின் போது நடைபெற்ற வன்முறைகள் சர்வதேச சமூகத்தை விசனமடையச் செய்துள்ளதாகவே நோக்கப்படுகிறது.

சர்வதேச சமூகத்தின் கதாநாயகனாக விளங்கும் அமெரிக்க அரசின் கவலை தோய்ந்த அறிக்கை அதற்கு ஆதாரமாக உள்ளது. அது மட்டுமல்லாது இந்த தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக உள்ளூரிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றியுள்ளன. தவிர வெற்றி பெற்ற அரச கூட்டணிக்குள்ளும் பதவிப்போட்டி தலை தூக்கியுள்ளது.

கிழக்கில் நடைபெற்ற தேர்தல் நீதியானதும், நேர்மையானதும் அல்ல என பல அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தெரிவித்துவரும் நிலையில் அங்கு புதிதாக வன்முறைகள் உரு வாகலாம் என்ற கவலை அமெரிக்காவிற்கு தோன்றியுள்ளது எனவும், மக்கள் தமக்கு விருப்பமான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க முடி யாததே அதற்கு காரணம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஏற்படுத்தி உள்ள குழப்பமான நிலைகளுக்கு மத்தியில் கிழக்கிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் வலுப் பெற்றுவருவதும் கிழக்கு நோக்கிய உலகின் கவனத்தை மேலும் கூர்மையாக்கி உள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட “நிட்சயமான வெற்றி” (Operation Definite Victory) படை நடவடிக்கை வெற்றிபெறாத தும், விடுதலைப்புலிகள் தமது நடவடிக்கை களை முற்றாக ஒரு கெரில்லா நடவடிக்கையாக மாற்றியமைத்ததும் கிழக்கில் தற்போது உக்கிர மடைந்துவரும் தாக்குதல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் தென்னிலங்கை வரை ஆழமாகப் பரவியதுடன், விடுதலைப்புலிக ளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் 15பேர் அடங்கிய ஒரு பிரிவு அம்பாந் தோட்டை, மொனராகலை மாவட்டங்கள் வரை ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.
மாகாணசபைத்தேர்தலுக்கு முன்னர் திரு மலை மாவட்டத்தின் பேராறு காட்டுப்பகுதி ஊடாக நகர்ந்த விடுதலைப்புலிகளின் அணி ஒன்றை படையினர் எதிர்கொண்ட போது மோதல் ஏற்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்திருந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் வெடித்த குண்டும் பெரும் பதற்றத்தை தோற்று வித்திருந்தது. எனினும் தேர்தல் காலத்தில் வெடித்த இந்த குண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் எனவும் அம்பாறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தேர்தல் ஆரம்பிப்பதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்னர் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்மிக்க இயற்கைத்துறைமுகமான திருமலை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு கிழக்கு பிராந்திய கடற்படை தலை மையகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிகாலை 2.15 மணியளவில் கடற்படை யினரின் வலிமைமிக்க கிழக்கு பிராந்திய கட் டளை தலைமையகத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த வர்த்தகத் துறைமுகமான சீனன் குடா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டி ருந்த ஏ520 இலக்கமுடைய “எம்வி இன்வின் சிபிள் (MV Invincible) என்ற விநியோகக் கப் பல் பெரும் வெடிப்பதிர்வுடன் தீப்பற்றிக் கொண்டது.

இது ஒரு வான்தாக்குதல் என எண்ணிய துறைமுகத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த கடற்படையினர் வானத்தை நோக்கி தமது இலகுரக மற்றும் கனரக இயந்திரத்துப் பாக்கிகளை தயார் படுத்திய போதும் பின்னர் அது வான்புலிகளின் தாக்குதல் அல்ல என்ற உண்மையை உணர்ந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அரசின் முக்கிய பொருளா தார, படைத்துறை கட்டமைப்புக்களை வான் புலிகள் தாக்கிய பின்னர் திருமலை துறைமுகத் தின் பாதுகாப்பை அரசு பல மடங்கு அதிகரித் திருந்தது. அங்கு வான் எதிர்ப்பு பொறிமுறைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. இலகுரக விமான எதிர்ப்புப் பீரங்கிகள் மற்றும் கனரக துப்பாக்கிகள் என்பன அதிகளவில் நிறுவப்பட்டிருந்தன.

மேலும் விடுதலைப்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவினர் துறைமுகத்திற்குள் ஊடுருவுவதை தடைசெய்யும் முகமாக கப்பல்கள் உட்சென்று வெளியேறும் வாயில்கள் தவிர ஏனைய பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரையிலும் இரும்புவலைகள் அமைக்கப்பட்டு பாது காப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் நீருக்கு அடியில் நகரும் வெடி குண்டு பொருத்தப்பட்ட நீரடிநீச்சல் பிரிவினரின் குண்டுகள் இலக்கை அடையும் முன்னர் வெடித்து சிதறும் வண்ணம் எழுந்தமானமாக நீருக்கு அடியில் சென்று வெடிக்கும் டொபிட் டோக்களும் கடற்படையினரால் பயன்படுத்தப் படுவதுடன், பல படகுகளில் துறைமுகத்தின் உட்பகுதிகளும், வெளிப்புறமும் தொடர்ச்சியாக தேடுதலுக்கு உட்படுத்தப்படுவதுண்டு.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் கடற்படையினரின் பீரங்கிக் கப்பல்களான ரண சுறு, சூரையா ஆகிய கப்பல்களும், அதன் பின்னர் டோறா அதிவேக தாக்குதல் கலம் மற்றும் விநியோகக் கப்பல்கள் என்பன திருமலை துறைமுகத்தினுள் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகின. அதனைத்தொடர்ந்து திருமலை துறை முகத்தின் நீருக்கு அடியிலான பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

கிழக்கு மீதான படை நடவடிக்கையின் முக் கிய நோக்கமும் திருமலை துறைமுகத்தை மையமாக கொண்டதாகவே இருந்தது. வட பகுதியில் முடங்கி போயுள்ள பெரும் இரா ணுவ இயந்திரத்தின் முக்கிய விநியோக மைய மான திருமலையின் பாதுகாப்பை உறுதி செய் வதே அந்த படை நடவடிக்கையின் பிரதான நோக்கம்.

இலங்கைத்தீவின் 21,700 கி.மீ நீளமான கடற்கரைப் பிரதேசத்தையும் நடைபெறும் போரில் அதன் முக்கியத்துவத்தையும் கருதி இலங்கையை சூழ 05 கட்டளைப்பீடங்களை கடற்படை அமைத்துள்ள போதும் இவற்றில் திருமலை, நிலாவெளி, திரியாய் தளங்களை உள்ளடக்கிய கிழக்கு கட்டளைப்பீடம் முக்கிய மானதா கவே நோக்கப்படுகிறது.
மோதல் நடைபெறும் களமுனை களிற்கு படையினரையும், விநி யோகங்களையும் நகர்த்துதல், விடுதலைப்புலிகளின் விநியோக வழிகளைத் தடுத்தல் என்பவற்றில் அதன் முக்கியத்துவம் அதிகமா னது. மேலும் சம்பூர் அனல்மின் நிலையம் அமைக்கும் அரசின் திட் டத்திற்கு வலுச்சேர்ப்பதும் இந்த துறைமுகம்தான். அதாவது இந்த துறைமுகத்தின் வர்த்தக பயன்பாட் டில்தான் அனல் மின்நிலையத்திற் கான முதலீட்டாளர்களின் ஆர்வம் தங்கியுள்ளது.

இந்த தாக்குதலின் படைத்துறை தாக்கங்களை பொறுத்தவரையில் கடற்படை தன்னிடம் இருந்த மூன்று விநியோகக் கப்பல்களில் ஒன்றை இழந்துள்ளது. கடற்படை யிடம் பி715, ஏ520, ஏ521 ஆகிய விநியோகக் கப்பல்களும் (Auxiliary Vessels) ஏ540, ஏ542, ஏ543 ஆகிய இலக்கங்க ளைக் கொண்ட துருப்புக்காவி கப் பல்களும் தற்போது சேவையில் உள்ளன. இவற்றில் ஏ520 விநியோகக்கப்பல் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் மூழ்கிப் போயுள்ளது.

துருப்புக்காவி கப்பல்களில் பெரும்பாலா னவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல்க ளாகும் என்பதும், விநியோக கப்பல்கள் ஆழ் கடல் நடவடிக்கையில் (Blue Water operation) ஈடுபடும் போர்க்கப்பல்கள் மற்றும் யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையின ருக்கான வழங்கல்களில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் விநியோகக் கப்பல் களை முடக்கிவிட்டதாக கடற்படையினர் மேற் கொண்டுவந்த பிரசாரங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி மன்னார் கடலில் இழக்கப்பட்ட டோறா அதிவேக தாக்குதல் படகிற்கு பின்னரான கடந்த 6 மாதகாலப் பகுதியில் ஒரு கப்பலை யும், 3 தாக்குதல் படகு களையும் அவர்கள் இழந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரு டோறா பீரங்கிப் படகுகள் (பி438, பி413), ஒரு நீருந்து விசைப்படகு, ஒரு விநியோகக் கப்பல் என் பவற்றை கடற்படை இழந் துள்ளது.
திருமலையில் கடற் கரும்புலித் தாக்குதலில் படகு மூழ்கடிக்கப்பட்டுள் ளதாக கடற்படை வட்டா ரங்கள் தெரிவித்துள்ள போதும் 3200 தொன் சுமையை கொண்டு செல்லும் 83 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் மிகவும் விரைவாக மூழ்கிப் போனது தாக்குதல் நடத் தப்பட்ட முறை தொடர்பாக சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதியாக விளங்கிய லெப். கேணல் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளபோதும், இந்த பத்தி எழுதப்படும் வரையிலும் அவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்த தமது கொமோண் டோக்களின் விபரங்களை அறிவிக்காததும் அவதானிகள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலானது நீருக்கு அடியில் பயணிக்கும் நீரடி நீச்சல் பிரிவினரால் அல்லது நீருக்கு அடியில் பயணம் செய்யும் சிறிய கலங்களினால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்கள் தோன்றியுள்ள வேளையில் தாக்குதல் நடத்திய கடற்புலிகளின் சிறப்புக் கொமோண்டோக்களோ அல்லது சிறிய கலமோ (water scooter) வேறு ஒரு அதிவேக தாக்குதல் படகு மூலம் திருமலை துறை முகத்தை அண்டிய பகுதிக்கு நகர்த்தப்பட்டி ருக்க வேண்டும்.

ஏனெனில் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவு நேரமே நீருக்கு அடியில்

பயணிக்கும் தன்மை கொண்டவை. உதாரணமாக waterscooter ஆனது 1 அல்லது 2 மணிநேரமே கட லுக்கடியில் பயணிக்கக் கூடியது.

அதனை உறுதி செய்வது போன்றே கடந்த வாரம் வெளியாகிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல்


waterscooter

சூசையின் உரையும் அமைந்திருந்தது. அதாவது கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்த கடற்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் கடாபி என்பவரே திருமலை தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணை வழங்கிய அதிவேக தாக்குதல் கலத்தின் இயந்திரத்தை வடிவமைத்தவர் என கேணல் சூசை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனினும் நீருக்கடியில் பயணிக்கும் சிறிய கலம் மூலம் தாக்குதல் நடத்தியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள கடற் படையினர், தாக்குதலை நடத்திய கடற்புலிகள் கடலான பகுதியில் இருந்தே வந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் பெருங் கப்பலின் வலிமை மிக்க அடிப்பகுதியில் அதிக சேதம் ஏற்படுத்திய இந்த குண்டு காந்தப்புலம் மூலம் பொருத்தப்படும் (Limpet mines) குண்டாக இருக்க முடியாது எனவும் அவர்கள் மேலும்


limpet mine

தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அண்மையில் நடைபெற்ற இரு தாக்குதல்களும் நீருக்கு அடியில் மிகவும் மர்மமான முறையில் நிகழ்த்தப்பட்டுள்ளது படைத்தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் நாள் அதிகாலை 2.30 மணியளவில் திருமலைக்கு வடக்காக உள்ள நாயாறு கடற்பகுதியில் டோரா பீரங்கி படகின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும், தற்போது விநியோக கப்பல் மீது மேற்கொள் ளப்பட்ட தாக்குதலும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

இரண்டும் அதிகாலை வேளையில் நடத்தப்ப ட்டதுடன், இரு சந்தர்ப்பங்களிலும் நிலையாக நின்ற கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு சந்தர்ப்பங்களிலும் ஆழ்கடலி லும், துறைமுகத்திலும் என வெவ்வேறு நிலை யிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானது எந்த களநிலையி லும் இலக்குகளை தாக்கி அழிக்கும் புதிய உத்தியை விடுதலைப்புலிகள் கொண்டுள்ள னரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

படைத்தரப்பை பொறுத்தவரையில் இழக்கப் பட்ட விநியோகக் கப்பல் யாழ்.குடா நாட்டிற் கான விநியோகங்களிலும், ஆழ்கடல் நடவடிக் கைகளிலும் கணிசமான பாதிப்புக்களை ஏற் படுத்தலாம். மேலும் கடந்த இரு மாதங்களில் விடுதலைப்புலிகள் 3 கப்பல்களில் ஆயுதங் களை தருவித்துள்ளதாக படையினரின் புல னாய்வுத்துறை தெரிவித்துள்ள நிலையில் விநி யோக கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

படைத்துறை தாக்கங்களை விடுத்து இந்த தாக்குதல் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கங் களை கருதினால், கப்பல்களின் இழப்புக்கள் ஒருபுறம் இருக்க அதனால் ஏற்படும் நேரடி யற்ற பொருளாதார இழப்புக்கள் கணிசமா னவை. வர்த்தகக் கப்பல் மீது மேற்கொள்ளப்ப டும் இந்த தாக்குதல்கள் இலங்கைக்குச் செல் லும் வர்த்தகக் கப்பல்களின் காப்புறுதித் தொகையை அதிகரிப்பதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த துறைமுகங்களும் ஆபத்து மிக்க பகுதிகளாகவும் தரப்படுத்தப்படலாம்.

எனவே நீண்ட பயணத்தின் பின்னரான ஓய் வுகள் மற்றும் எரிபொருள் தேவை கருதி இலங் கையை நாடும் கப்பல்கள் அதற்கு அண்மை யாகவுள்ள வேறு நாடுகளை நாட முற்படலாம். இது இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்திலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. மேலும் திருமலை துறைமுகத்தின் பாதுகாப்புக் களை நம்பி ஆரம்பிக்கப்படும் அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளையும் இந்த தாக் குதல் கேள்விக்குறியாக்கி உள்ளது. அதாவது அனல் மின்நிலையத்திற்கு தேவையான எரி பொருட்களையும், உபகரணங்களையும் கொண்டுவருவதற்கும் திருமலை துறைமுகம் முக்கியமானது.

வான்புலிகளின் தொடர் தாக்குதல்களை தொடர்ந்து தனது பொருளாதார வளங்களை வான்பாதுகாப்புக்கு அதிகளவில் செலவிட்டு வரும் அரசுக்கு இனிவரும் காலங்களில் கட லடி பாதுகாப்பு பொறிமுறைகளுக்கு பெருமள வான நிதியினை ஒதுக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.

திருமலையில் ஆரம்பித்த இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை 10ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள பன்னல் கம பகுதியில் அமைந்திருந்த படை நிலைக ளின் மீது விடுதலைப்புலிகள் 81 மி.மீ எறி கணை தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தக் கிராமத்தில் 18 எறிகணைகள் வீழ்ந்து வெடித் துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 5 கி.மீ தூரவீச்சுக் கொண்ட 81 மி.மீ எறிகணை களுடன் விடுதலைப்புலிகள் அங்கு இயங்கி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த் தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் உள்ள அரசடிச் சந்தியில் கடந்த திங்கட்கிழமை மாலை காவல்துறை சார்ஜன் ஒருவர் கைத்துப் பாக்கி அணியினரின் தாக்குதலில் உயிரிழந் துள்ளதாகவும், மேலும் ஒருவர் காயமடைந் துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கை பொறுத்தவரையில் அதன் பாது காப்பு தொடர்பான அரசின் தகவல்கள் மெல்ல மெல்ல வலுவிழந்து வருவதுடன், நடைபெற்று முடிந்த தேர்தல் அங்கு மேலும் நெருக்கடிகளை உருவாக்கி வருவதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

No comments: