Tuesday, 13 May 2008

ப்ரமுக வங்கியில் வைப்பிலிட்டோரின் பணம் மீளவழங்கப்படவுள்ளது

ப்ரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியில் பணத்தினை வைப்புச் செய்து அதனை மீளப் பெற்றுக் கொள்ளாத 15,200 வைப்பாளர்களுக்கு, சுமார் ஆறு வருடங்களுக்குப் பின்னர் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் இலங்கை சேமிப்புகள் வங்கி(Sri Lanka Savings Bank) மூலம் தமது கணக்குகளை உறுதிப்படுத்துமாறு குறிப்பிடப்பட்ட கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த வங்கியில் பணத்தினை வைப்புச் செய்தோர் மற்றும் கடன் பெற்றோர் ஆகியோரிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மொத்தமாக வங்கியினால் செலுத்தப்பட வேண்டிய முழுத்தொகை 670 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பணத்தினை வைப்பிலிட்டோருக்கு அவர்களது வைப்புத் தொகை மற்றும் ஏனைய விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது பணமீதிகள் மற்றும் ஏனைய விபரங்களை தமக்கு உறுதிப்படுத்துமாறு இலங்கை சேமிப்புகள் வங்கி வேண்டியுள்ளது.

சேமிப்பு வைப்பு மற்றும் நிலையான வைப்புச் செய்தவர்களுக்கு ஜுன் மாதம் 3 ஆம் திகதிக்குப் பின்னர் ஒரு லட்சம் ரூபா வரை வழங்கப்படவுள்ளதாகவும், மீதிப் பணம் எதிர்காலத்தில் வழங்கப்படும் எனவும் வங்கி அறிவித்துள்ளது. சிறுவர் கணக்குகள், அவர்கள் குறித்த வயதினை எட்டும்வரை இலங்கை சேமிப்புகள் வங்கியின் கீழேயே தொடர்ந்தும் இருக்கும் எனவும் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2002 இல் செயலிழந்த ப்ரமுக வங்கியில் நிதியினை வைப்பிலிட்டவர்களுக்கு பணத்தினை மீளளிக்கும் பொருட்டு இலங்கை சேமிப்புகள் வங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: