Thursday, 15 May 2008

`தேர்தலில் வெற்றியை கொண்டாடினாலும் தமிழர் மனதை வென்றெடுக்க நீண்ட பயணம் தேவை'

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றியை இலங்கை அரசாங்கம் கொண்டாடுகின்ற போதிலும் தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க நீண்டதூரம் செல்லவேண்டியிருக்குமென ஆய்வாளர்களும் அவதானிகளும் சுட்டிக்காட்டியிருக்கும் அதேசமயம், தமிழ் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினரை வைத்துக்கொண்டு அபிவிருத்திக்கென ஒரு தொகை பணத்தை கையளித்து மக்களின் மனதை வென்றெடுத்ததாக நினைப்பது அரசாங்கத்திற்கு போதியளவான விடயமல்ல என்று மேற்குநாட்டு இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தனது பாதுகாப்புப் படையினரையும் புலிகளிலிருந்து பிரிந்துசென்றவர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு செயற்படுவதற்கான சிறியளவிலான சுதந்திரத்தையாவது வழங்குவதற்கு ஆரம்பிக்க வேண்டுமென்பதே உண்மையில் தேவைப்படும் விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இவை கடினமான விடயங்களாகும். ஏனெனில், கிழக்கு தற்போதும் யுத்த நிலையில் ஆபத்தான கட்டத்திலும் இருக்கின்றது என்றும் அவர் ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்கு நேற்று தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வெற்றியின் மூலம் அந்தப் பிராந்தியத்திற்கு அதிகளவு சுயாட்சியை வழங்கவும் உள்நாட்டு யுத்தத்திற்கு அடிப்படைக் காரணங்களுக்கு பரிகாரம் காணவுமே வாக்காளர்கள் ஆளும் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

`மக்களின் அபிவிருத்தி தொடர்பாக இதய சுத்தியுடன் இருப்பதை வெளிப்படுத்த வேண்டியதே அரசாங்கத்திற்கு தற்போதுள்ள பாரிய சவால்' என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திற்கு சார்பான ஆயுதக் குழுவாக இருப்பதால் கிழக்கிலுள்ள தமிழர்களின் அச்சமில்லாத ஆதரவை அரசு பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அவர்கள் (த.ம.வி.பு.) துவக்குடன் இருந்தால் தமிழ் மக்களுக்கு வேறுதேர்வு இல்லாமல் த.ம.வி.பு.வுக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும். எவரிடம் ஆயுதங்கள் இருக்கின்றதோ அவர்களே வெற்றியடைந்துள்ளனர் என்றும் சித்தார்த்தன் கூறியுள்ளார். புலிகள் பயப்பிராந்தியை உருவாக்கினார்கள். இப்போது மற்றொரு குழு அதனை கைப்பற்றிக் கொண்டு அதேவிடயத்தை மேற்கொண்டு வருகின்றனர்" என்றும் அவர் கூறியுள்ளார்.

`பயங்கரவாதத்தை தோற்கடிப்பதன் மூலம் சமாதானத்திற்கான தெளிவான மக்கள் ஆணையை தேர்தல் பெற்றுத்தந்திருப்பதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதுடன், இதன்மூலம் ஜனநாயகம் வலுவடையுமெனவும் நாட்டின் அபிவிருத்தி மேம்பாடு காணுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஏனையோர் இதில் நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர்.

இராணுவ தந்திரோபாயத்தை முன்னெடுப்பதற்கான நம்பிக்கையை கிழக்குத் தமிழர்கள் வெளிப்படுத்தியிருப்பதாக தேர்தல் வெற்றியை அரசாங்கம் காண்பிக்க முற்படுவதாக அரசியல் பத்தி எழுத்தாளரான டில்ருக்ஷ கந்துநெட்டி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் (வாக்காளர்கள்) துப்பாக்கியின் நிழலிலேயே அரசின் வாக்குறுதிகளுக்கு அங்கீகாரமளித்துள்ளனர். இது நியாயபூர்வமான வெற்றியல்ல என்று அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் சிங்கள ஆதிக்க கட்டமைப்பிலிருந்து அதிகளவு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை தற்போது ஜனாதிபதி துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் இராஜதந்திரி நந்தா கொடகே தெரிவித்திருக்கிறார். `தன்னிடமிருப்பதை கொடுப்பதற்கான பரீட்சை இதுவாகும். அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளத் தயாரென அவர் கூறுகிறார். இந்த விடயத்தில் அவர் வெற்றி பெற்றால் வடக்கு மக்களும் தமது தலைவிதியை தீர்மானிக்க அவர் அனுமதிப்பார் என்பதை வெளிப்படுத்த முடியும்' என்று கொடகே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கிழக்கிலுள்ள தமிழர்கள் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வின்றி துன்பத்துடன் உள்ளனர். கடுமையான மீன்பிடிக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பெரும் துன்பத்துடன் அவர்கள் உள்ளனர்.


No comments: