Thursday, 15 May 2008

கிழக்கு முதலமைச்சர் தெரிவில் சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது - ஜாதிக ஹெல உறுமய


கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவின் போது சிங்கள பிரதிநிதிகளிடம் கருத்து கோரப்படாமல் சிங்கள மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இணையதளமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

சிங்கள பிரதிநிதிகளின் கருத்துக்கள் அறியப்படாது, தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களின் விருப்பத்தின்படி முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவதற்கு தமது கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிங்களத் தலைவர்களது கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என தமது கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தமிழர்களும், ஹிஸ்புல்லாவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம்களும் கோரிக்கை விடுக்கின்றனர். எனினும், சிங்களப் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருட காலமாக கிழக்கு வாழ் சிங்களவர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைமையின் கீழ் சிங்களவர்கள் தமிழ், முஸ்லிம்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 316,101 சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 21.63 வீதமான சிங்களவர்கள் கிழக்கில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் 4 சிங்கள உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கில் நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதனால் அவர்களிடம் முதலமைச்சர் தெரிவு குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இது சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கட்சி நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முதலமைச்சர் தெரிவின் போது சிங்களப் பிரதிநிதிகளிடமும் கருத்து அறியப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுப்பதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: