*அரியநேத்திரன் எம்.பி.கூறுகிறார் `வெற்றிலை'யைக் காட்டி, கிழக்குத் தேர்தலில் போட்டியிட்டவர்களை அரசு `கறிவேப்பிலை'யாக மாற்றி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளனர். ஆனால், ஜனநாயகத் தேர்தல் என்று கூறிக் கொண்டு சர்வாதிகார தேர்தல் மூலம் கிழக்கு மாகாணத்தில் 61 வீதமானர்கள் வாக்களித்ததாக காட்டப்பட்டாலும் உண்மையில் தமிழ் மக்களில் 40 வீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். திருகோணமலை மாவட்ட மக்களும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தொகுதி மக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதி மக்களும் அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்துள்ளனர். பட்டிருப்பு தொகுதியில் வெற்றிலையில் போட்டியிட்டவர்களுக்கு 14,379 வாக்குகள் கிடைத்த அதேவேளை, அரசுக்கு எதிராகப் போட்டியிட்ட ஏனைய கட்சிகளுக்கு 17,900 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இதன்படி பட்டிருப்பு தொகுதியில் 3500 வாக்குகளால் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இதைவிட பட்டிருப்பு தொகுதி தனித்தமிழர்களின் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் ஆளும்தரப்பில் இருந்தோ, எதிர்த்தரப்பில் இருந்தோ கிழக்கு மாகாண சபைக்கு எந்தவொரு உறுப்பினரும் தெரிவு செய்யப்படவில்லை. இதன்மூலம் பட்டிருப்பு தொகுதி வாழ் தமிழ் மக்கள் கிழக்கு மாகாணசபையை முழுமையாக நிராகரித்துள்ளனர் என்பது தெளிவு. இப்போது வெற்றி பெற்றதாகக் கூறும் பிள்ளையான் குழுவும், ஹிஸ்புல்லா குழுவும் முதலமைச்சர் பதவிக்காக கயிறிழுத்தல் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கே மாம்பழம் தருவதாக சிவபெருமான் கூற சிவனையும் உமையையும் சுற்றி வந்து உலகத்தை சுற்றியதாக பிள்ளையார் மாம்பழம் பெற்றதும், முருகப் பெருமான் மயிலேறி உலகத்தைச் சுற்றி இறுதியில் மாம்பழம் இல்லாமல் போன கதையும் போலவே இப்போது ஹிஸ்புல்லா, அமைச்சர்களை சுற்றுவதைக் காணமுடிந்தது. இறுதியில் ஜனாதிபதி யாருக்கு மாம்பழம் கொடுத்தாலும் அதுவெறும் கறிவேப்பிலையாகவே காட்சிதரும் எனவே, இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமது வேண்டுகோளை ஏற்று அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை இந்தத் தேர்தல் புள்ளிவிபரங்கள் தெளிவாக காட்டுவதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
Thursday, 15 May 2008
கிழக்குத் தேர்தலில் போட்டியிட்டவர்களை அரசு `வெற்றிலை'யை காட்டி `கறிவேப்பிலை' யாக்கி விட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment