Monday, 19 May 2008

மிகவும் பயங்கரமானதொரு எதிர்காலத்தில் இலங்கை சிக்கியுள்ளது

jr_mahinda.jpgஇலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இரண்டு பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று நவீன இலங்கையின் மிகப்பெரிய தந்திரசாலியாகச் சொல்லப்படுகிற ஜே. ஆர் ஜெயவர்த்தன காலத்தில் ஏற்பட்டது. அடுத்தது இப்போது திரு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் உருவாகியிருப்பது.

இந்த இரண்டு நெருக்கடிகளும் முழுச் சிங்களச் சமூகத்தின் அங்கீகாரத்துடன் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், இதனால் பாதிக்கப்படுவதோ எந்தவிதமான சம்பந்தமுமில்லாத தமிழ் முஸ்லிம் மக்கள்.

ஜே.ஆரின் காலகட்டம் பனிப்போர்; நிலவிய சூழல். அன்றைய சர்வதேச பிராந்திய சக்திகளின் இயல்புக்குள்ளும் போக்குகளுக்கிடையேயும் அவற்றின் அணுகுமுறைகளுக்குள்ளும் புகுந்து விளையாடினார் ஜே.ஆர்.

தமிழரை அழிப்பதற்காக எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேர்வேன்" என்று பகிரங்கமாகவே கூறியவர்


ஆனால் துயரமென்னவென்றால், அவரை மீறிய நிலைமைகள் அவரையே வியூகமிட்டு அவரைத் தோற்கடித்தன. அவருடைய எந்தத் தந்திரமும் கெட்டித் தனங்களும் அவரைக் காப்பாற்றவில்லை. அவருடைய சர்வதேச நண்பர்களாலும் பிராந்திய நண்பர்களாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அன்றைய நிலைமைகளை அறிந்தவர்களுக்கு இதெல்லாம் நன்கு தெரியும்.

யாழ்ப்பாணத்தில் இந்தியா உணவுப் பொதிகளை விமானங்களின் மூலமாகப் போட்டபோது இலங்கை எந்தளவு நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது என்பது புரிந்தது. அதற்குப்பிறது இலங்கையில் நடந்த நிகழ்ச்சிகள் இந்த நெருக்கடியை மேலும் உச்ச நிலைக்கு கொண்டு சென்றன.

இந்திய இராணுவத்தின் வருகை, ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட எழுச்சிக்கு வித்திட்டது. இரண்டு பெரும் பிரச்சினைகளால் ஜே.ஆர் துவண்டார். அதன் விளைவாக அவர் தவிர்க்க முடியாமல் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார். பதிலாக தனக்கு விருப்பமானவர்களை, தன்னுடைய அரசியல் வாரிசுகளை அவர் சிபாரிசு செய்யாமல், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையுடைய பிரேமதாசாவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அப்படியான நிலைமையே அப்போது இருந்தது.

தான் தோல்வியடையும் போதும் தன்னுடைய தந்திரத் தனத்தை அவர் கைவிடவில்லை. அந்த நெருக்கடி நிலையில் பலியாகக் கூடியவாறே அவர் தனக்கு விருப்பமில்லாத பிரேமதாசாவை தேர்வு செய்தார். அதாவது ஜே.ஆரின் அரசியல் வாரிசுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தார் பிரேமதாச.

பிரேமதாசா அந்தக் கொந்தளிப்பான அரசியற் சூழலில் எப்படியும் பலியாகுவார் என்றே ஜே.ஆர் எண்ணினார். ஒன்று அவரை இந்தியா அகற்றும். அல்லது ஜே.வி.பி கொல்லும். அல்லது விடுதலைப் புலிகளால் அவருக்கு ஆபத்து நேரும் என்பத ஜே.ஆரின் கணிப்பு.

பிரேமதாச இல்லாமற் போகும்போது அதற்குப் பதிலாக தன்னுடைய அரசியல் வாரிசுகளை அதிகாரத்துக்கு கொண்டு வரலாம் என்று விரும்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு முரணாகவே நிலைமைகள் அமைந்தன.

அதாவது அவர் உருவாக்கிய நெருக்கடிகளுக்கும் அவர் விரும்பிய போருக்கும் அவருடைய விருப்பங்கள் அனைத்தும் பலியாகின. அவருடைய வாரிசுகளான லலித் அத்துலத் முதலி, காமினி திசநாயக்க போன்றோhர் ஜே.அரின் போர் வெறியினாலேயே பலியானார்கள். உண்மையில் இதற்கெல்லாம் பொறுப்பு அவரே. அவை பற்றிய விவரங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால் இங்கே அவற்றைக் குறிப்பிடவில்லை.

ஆக, அதைப்போன்றதொரு நிலைமை இப்போது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலும் உருவாகியுள்ளது. மகிந்த ராஜபக்சவும் தந்திரங்களாலும் எதையும் எடுத்தெறியும் கடும்போக்காலும் இந்த நெருக்கடிகளை ஜே.ஆரைப்போல உருவாக்கியிருக்கிறார்.

பிராந்திய நெருக்கடி, சர்வதேச நெருக்கடி, உள்ளூர் நெருக்கடி என சகல நெருக்கடிகளும் இன்று இலங்கைத் தீவைச் சூழ்ந்துள்ளன. மனித உரிமை மீறல்கள், தொடரும் போர், பொருளாதார வளர்ச்சியின்மை போன்ற முதன்மைக் காரணங்கள் இந்த நெருக்கடியை உருவாக்கி இருக்கின்றன.

ஜே.ஆர் அதிகாரத்திலிருந்தபோது தமிழர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தார். அதைப்போல தமிழ் மக்களின் மீது போரைப் பிரகடனப்படுத்தி அதை முழுமூச்சுடன் நடத்திக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

ஜே.ஆர் எதிர்க்கட்சிகளையும் பிற தரப்பினரையும் சிதைத்து ஒடுக்கினார். சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமையையேப் பறித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருந்தபோதும் அவர்களின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவர்களை கைது செய்ய முயன்றார். அதாவது இவ்வறெல்லாம் செய்து தனது ஆட்சி அதிகாரத்தை கேள்விக்கிடமில்லாத வகையில் நீடிக்க முயன்றார். அதன்படியே அப்பொழுது ஐ.தே.க. வால் பதினேழு ஆண்டுகாலம் ஆட்சி செய்ய முடிந்தது.

அதைப் போன்றே, மகிந்த ராஜபக்ஸ இப்போது பிற கட்சிகளை உடைத்தும் சிதைத்தும் வருகிறார். தமது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான வகையில், தன்னை எந்த நிலையிலும் எதிர்க்கும் விமர்சிக்கும் தரப்பினரைப் பழிவாங்கும் இயல்பு இதற்குள் எப்பொதும் மறைந்திருக்கிறது. இதன்படி இப்போது அதிகம் எரிச்சலூட்டும் மனிதராக மகிந்த ராஜபக்ஸவுக்கு ரவூப் ஹக்கீமே இருக்கிறார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை அவர் உடைத்து சுக்கு நூறாக்கியதே இந்த அடிப்படையில்தான்.

ஆயிரம் விமர்சனங்கள் குறைபாடுகள் உண்டென்றாலும் ஹக்கீமே தீர்க்க தரிசனமும் அரசியல் நாகரீகமும் விவேகமும் உள்ள இன்றைய முஸ்லிம் தலைவர். ஆகவே அவரைக் குறிவைக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

ஹக்கீமுக்கு எப்பொழுதும் சிங்களத் தரப்பினால் ஆபத்தே. ஏனைய முஸ்லிம் பிரமுகர்கள் மலிவு விலையில் சிங்களத் தரப்பினரால் வாங்கப்பட்டு விட்டனர். அவர்கள் ஒர் 'சீசனு"டன் அநேகமாக காணாமற் போகவேண்டியதுதான். இதுதான் நடக்கப் போகிறது. இதை வேண்டுமானால் யாரும் பொறுத்திருந்து பார்க்கலாம். இதைப் பற்றி பின்னர் தனியாக விரிவாகப் பார்க்;க வேண்டும். இப்போது நாம் மகிந்த ராஜபக்ஸ, ஜே.ஆர் இருவரினதும் வழிமுறைகளைப் பற்றியும், அவர்களுடைய தந்திரம் மற்றும் தவறான போக்குகளால் விளைந்த அரசியல் நெருக்கடிகளைப் பற்றியும் தொடர்ந்து பார்ப்போம்.

தமது அரசியல் ஆதாயத்துக்காக இருவரும் மிகக் கீழ்த்தரமான வழிமுறைகளையெல்லாம் கையாண்டனர். அதற்காக இருவரும் ஒருபொழுதும் வெட்கப்பட்டதோ, தயங்கியதோ, அச்சமடைந்ததோ இல்லை.

விடாப்பிடி, எடுத்தெறியும் போக்கு, இனவிரோதம், போர்ப்பிரியம், அதிகார வெறி என்ற விடயங்கள் இருவருக்கும் பொதுவானவை. இருவருமே இலங்கையின் ஜனநாயகத்தை அதிகம் நெருக்கடிக்குள்ளாக்கிய தலைவர்கள்;.

இதன்படி எந்தக் கூச்சமுமில்லாமல் இரண்டு இன வன்முறையை நடத்தியவர் ஜே.ஆர். அதைப்போல கிழக்கில் பெரும்போரை நடத்தி அதைத் தனியாகப் பிரித்திருக்கிறார் ராஜபக்ஸ.

தொடர்ந்து இப்போது வடக்கையும் அப்படியே தன்னுடைய காலின் கீழ் கொண்டு வந்து விடவேண்டும் என்ற பெருங்கனவோடு இருக்கிறார் அவர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றியோ அவர்களுக்கான தீர்வு பற்றியோ சிந்திப்பதை விடவும் அவர்களை எப்படிப் போரில் தோற்கடிப்பது என்பதைப் பற்றியே அவர் அதிகம் சிந்திக்கிறார்.

இதற்காக அவர்; தன்னை அறிந்தோ அறியாமலே ஏராளம் ஏராளம் தவறுகளைச் செய்து கொண்டேயிருக்கிறார். அதனால் பல பிரச்சினைகள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளே சிறிலங்கா மீதான நெருக்கடிகளாகவும் இருக்கின்றன.

எனவே முன்னர் கூறியதைப்போல் இந்தக் காரணங்களால் இப்போது அரசாங்கம் உள்ளூரிலும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. அதைப்போல வெளியே சர்வதேச ரீதியாகவும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டுள்ளது.

நிலவரம் பத்திரிகைக்காக கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்



உள்ளூரில் விலைவாசி உயர்வு, ஊதியத்தை அதிகரிக்க முடியாத நிலை, பொருளாதார நெருக்கடி, முடிவற்றுத் தொடரும்போர், வெல்ல முடியாத இராணுவ நடவடிக்கைகள் என்று இவை எல்லையற்று விரிகின்றன. இதன் உச்சக் கட்டமாக இப்போது நாடாளுமன்றத்தையே எந்த அடிப்படையுமற்று மூடும் அளவுக்கு அரசாங்கம் சென்றுள்ளது.

மனித உரிமை மீறல்கள், ஊடகவியலாளர் படுகொலைகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாமை, தொண்டு அமைப்புகளின் பணிக்கு அச்சுறுத்தல் என்ற எல்லா அம்சங்களிலும் அபாயநிலைகள் உருவாகியிருப்பது மகிந்த ராஜபக்ஸவின் காலகட்டத்தில்தான்.

அதைவிடவும் சாதாரணமாக பொதுமக்கள் பேரூந்துகளில் பயணம் செய்ய முடியாத நிலையையே அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது அம்பாறையில் ஒரு உணவகத்திலேயே பொதிக்குண்டொன்று வெடித்துள்ளது. அதில் பத்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகச் செய்திகள் வந்த கொண்டிருக்கின்றன. இப்படி நாடு இரத்தக்களரியாகி விட்டது. இது கிழக்கின் மாகாணசபைத் தேர்தற் பரிசு என்றறொரு ஊடகவியலாளர் கூறுகிறார். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுமளவுக்கு மகிந்த ராஜபக்ஸ இல்லை. அவருடைய போர் விருப்பு இதை உணரவிடாது.

போருக்காகவே எந்த அரசியல் உறவும் என்ற கொள்கையை உடையவர் ஜே.ஆர். 'தமிழரை அழிப்பதற்காக எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேர்வேன்" என்று பகிரங்கமாகவே கூறியவர்; அவர். அந்த வழியில் தமிழ் மக்களின் மீதான போருக்காக அந்தப் போரில் தான் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் துடித்துக் கொண்டிருப்பவர் இன்றைய ஜனாதிபதி. அவர் பலருடைய எதிர்ப்புகளின் மத்தியிலும் மடுத் தேவாயத்தின் மீதே போரைத் தொடுத்திருக்கிறார். மடு மாதாவை இடம்பெயர வைத்திருக்கிறார்.

தன்னுடைய இந்த மாதிரியான ஏராளம் பிரச்சினைகள் போக்குகள் இயல்புகள் காரணமாக நாட்டுக்கு நெருக்கடிகளை விலை கொடுத்து வாங்கிக் கொணடிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. உதவி வழங்கும் நாடுகள் தமது உதவிகளைக் குறைப்பது பற்றி சிந்திக்கின்றன.

ஐ.நா மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல பொது சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. பகிரங்கமாகவே அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை இலங்கையின் போக்கை பல விதமாகவும் பல தடவைகள் எச்சரித்திருக்கின்றன.

இவ்வாறான ஒர் நிலைமை இதற்கு முன்னர் இலங்கைக்கு ஏற்பட்டதில்லை என்ற வரலாற்று ஆய்வாளர்களும் அரசியல் அறிஞர்களும் வருத்தத்தோடு கூறுகிறார்கள். ஆனால், என்னதான் பயன்? கெடுகுடி சொல் கேளாது என்பார்களே. அதைப் போல் நாட்டின் நிலையை பாதகமான கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது அரசாங்கம்.

மிகவும் பயங்கரமானதொரு எதிர்காலத்தில் இலங்கை சிக்கியுள்ளது. அதை மீட்பதற்கு இன்று எந்தச் சிங்களவருக்கும் விருப்பம் இல்லை. பதிலாக இன்னும் இன்னும் நாட்டை அழிவு நிலைக்கே கொண்டு செல்கிறார்கள் அவர்கள். இதற்குக் காரணம் உலகம் கண்டிக்கும், அநாகரிகம் என்று கூறும் இனவாதமே.

நன்றி: சுவிஸ் நிலவரம் பத்திரிகை

thank oyu:swiss murasam also

No comments: