Tuesday, 20 May 2008

புத்தல- கதிர்காமம் வீதியில் தாக்குதல்: பதட்டம் தொடர்கிறது


புத்தல- கதிர்காமம் வீதியில் உள்ள காவல்துறை காவலரண் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த சிவில் பாதுகாப்பு சிப்பாய், புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது,யார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என ஊடக தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து புத்தல காவல்துறையினரிடம் கேட்ட போது, தாம் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று விசாரணைகளை நடத்தியதாகவும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் விடுதலைப்புலிகளே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் பரவி வருவதாகவும் புத்தல காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்னார் புத்தல – கதிர்காம வீதியில் கல்கே என்ற இடத்தில் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சில படையினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து படையினர் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எவரையும் கைதுசெய்ய முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments: