கிழக்கு மாகாணத்தில் போலி வாக்காளர் அட்டைகளை மக்களுக்கு வழங்கி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அரசாங்கம் முயற்சியெடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான பட்டியலைத் திரட்டியிருக்கும் அரசாங்கம் அவர்களின் பெயர்களுக்கு வாக்காளர் அட்டைகளை நிரப்பி அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படும் பாரதி என்பவரிடம் கையளித்துள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவானவர்களைக் கொண்டு போலி வாக்குகளிக்கும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறு போலி வாக்களிப்பதற்கு ஏதுவாக கிராம சேவகர்கள் ஊடாக போலி அடையாள அட்டைகளும் வழங்குவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான 170,000 வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் தபால் நிலையங்களிலேயே வைக்கப்பட்டிருப்பதாக அவர் நேற்றுக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
நீதியான தேர்தல் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தத் தவறியமைக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்
கிழக்கு மாகாணத்தில் நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதற்கு ஏதுவான சூழ்நிலையை உறுதிப்படுத்த அரசாங்கம், தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தவறியிருப்பதாகக் கூறியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இதற்கு எதிராக நாளை செவ்வாய்கிழமை சத்தியாக்கிரகப் போராட்;டமொன்றை நடத்தவுள்ளது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் திணைக்களத்துக்கு முன்னால் நடைபெறுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தலைமைவகிக்கும் பிள்ளையான் தரப்பினரின் ஆயுதங்களைக் களையாமல் தேர்தல் நடத்தப்படுகின்றமைக்கும் நாளைய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment