சீனாவில் சொந்தக் கணினிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருப்பதன் காரணமாக, கடந்த வருடம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், மென்பொருள் சூறையாடலும் அதிகரித்திருப்பதாக கணினி மென்பொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சராசரி மென்பொருள் சூறையாடலின் வீதம் 2006 ஆம் ஆண்டில் காணப்பட்ட 55 வீதத்திலிருந்து 2007 ஆம் ஆண்டில் 59 வீதமாக அதிகரித்திருப்பதாக வணிக மென்பொருள் கூட்டணி தெரிவித்துள்ளது.
2007 ஆம் ஆண்டில் ஆசிய மென்பொருள் சூறையாடலில் பங்களாதேஷ் 92 வீதங்களுடன் முதலிடத்திலும், இலங்கை 90 வீதங்களுடன் 2வது இடத்திலும், வியட்னாம் 88 வீதங்களுடன் 3ம் இடத்திலும் இருப்பதாக வணிக மென்பொருள் கூட்டணி தெரிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் ஆகக் கூடுதலாக ஆர்மேனியாவிலேயே 93 வீத மென்பொருள் சூறையாடல் நடப்பதாகவும், மிகக் குறைவாக அமெரிக்காவில் 20 வீத மென்பொருள் சூறையாடல் நடப்பதாகவும் அக்கூட்டணி தெரிவித்துள்ளது.
மொத்த கணினிச் சந்தையில் சீனாவிலேயே தனிப்பட்ட கணினிப் பாவனை அதிகரித்திருப்பதாகவும் அக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சூறையாடல்களின் காரணமாக, 2006 ஆம் ஆண்டில் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாகவும், அந்தத் தொகை 2007 இல் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக மென்பொருள் கூட்டணியில் மைக்ரோசொப்ட், அப்பிள், மெக்அபீ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
சட்டவிரோத மென்பொருள் தயாரிப்பு, தனியார் மென்பொருட்களின் சில்லறை விற்பனை, மற்றும் தரவிறக்கம், அனுமதிப்பத்திரமற்ற மென்பொருள் விற்பனை ஆகிய வழிகள் மூலம் இந்த மென்பொருள் சூறையாடல் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வணிக மென்பொருள் கூட்டணி 108 நாடுகளில் மென்பொருள் சூறையாடல் குறித்த ஆய்வினை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment