கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவதன் மூலம் தமிழ் இராச்சியமொன்று உருவாகும். அந்த இராச்சியம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கக்கூடிய ஓர் அலகாக செயற்படும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தமக்கு எதிரான தமிழ் இராச்சியமொன்றுக்கே அவர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு வளங்களை சுரண்டி சர்வதேசத்தின் கைப்பொம்மையாக பிள்ளையான் செயற்படும் வரை அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் இடையிலான உறவு மிக வலுவானதொன்றாகக் காணப்படும் என அவ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நடைபெற்ற மிக மோசமான ஊழல்நிறைந்த தேர்தலாகவே கிழக்குத் தேர்தல் அமைந்துள்ளது. பாரியளவிலான சம்பவங்களோ வன்செயல்களோ பதிவாக போதிலும் மிக சூசகமாக அபரிமித தேர்தல் கொள்ளையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று தவறுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர் என சிங்கள நாளேடு செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் குழுவினருக்கு 12 முகாம் இருப்பதாகவும், பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் மறைமுகமாக இந்தத் தேர்தல் கொள்ளைக்கு உடந்தையாக செயற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் எதிர்காலத்தில் மீண்டுமொருமுறை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஹிஸ்புல்லா அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தால் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு கிழக்கில் உள்ள செல்வாக்கு குறைவடையும் இந்த நிலைமையை ரவூப் ஹக்கீம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வெகுவிரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரவூப் ஹக்கீம் இணைவதை நாம் காணக்கூடியதாக இருக்கும் என அவர் எதிர்வுகூறியுள்ளார். கிழக்குத் தேர்தல்களின் போது ஜே.வி.பி.யின் முகத்திரையும் கிழித்தெறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குத் தேர்தல்களின் மூலம் தமிழ் முஸ்லிம் பிரிவிணைவாதம் மிகவும் மோசமான வகையில் தூண்டப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கில் தனியான மாகாணசபையொன்றை அமைப்பதன் மூலம் கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது என கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். எனவே எதிர்காலத்தில் பல்வேறு குழப்ப நிலைமைகள் உருவாக இந்த மாகாணசபை வழிகோலும் என அவர் தனது செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment