Thursday, 15 May 2008

பிள்ளையான் முதலமைச்சராவதற்கே சாத்தியக்கூறுகள் அதிகம்: சிரேஷ்ட அமைச்சர்களுடன் ஜனாதிபதி பேச்சு

முஸ்லிம் அமைச்சர்கள் ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளபோதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையானே முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கூடுதலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்பொழுது லண்டன் சென்றிருக்கும் ஜனாதிபதி கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு சிரேஷ்ட அமைச்சர்களைத் தொடர்புகொண்டு, ஹிஸ்புல்லா முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்த்துவைக்குமாறு பணித்திருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் பதவிக்கு தானே நியமிக்கப்படுவேன் என ஹிஸ்புல்லா உறுதியாகக் கூறியிருப்பது குறித்தும் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

“நாடு திரும்ப முன்னர் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஜனாதிபதி எம்மிடம் கூறியுள்ளார்” என ஜனாதிபதி கலந்துரையாடிய அமைச்சர்களில் ஒரு அமைச்சர் அந்த ஊடகத்திடம் கூறியுள்ளார். பிரச்சினைக்கு முகம்கொடுக்கும் நோக்கில் இலங்கை வருவதற்கு விரும்பவில்லையென ஜனாதிபதி கூறியிருப்பதாகவும் அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையானே முதலமைச்சராக நியமிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த அமைச்சரை மேற்கோள்காட்டி அந்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளையானே அந்தப் பதவிக்குப் பெருத்தமானவர் என முஸ்லிம் அமைச்சர்களிடம் கூறுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவை, ஹிஸ்புல்லா சந்தித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

No comments: