Thursday, 15 May 2008

கிழக்கில் இனக்கலவரத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி- ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் வன்முறைகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நடைபெற்று முடிவடைந்திருக்கும் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ளபோதும் இதுவரை முதலமைச்சர் யார் என்பதை அரசாங்கம் அறிவிக்கவில்லையெனவும், இதனால் முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையில் வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மொகமட் நௌஷாட் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டால் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவியும், தமிழ் பிரதிநிதிகள் கூடுதலாகத் தெரிவுசெய்யப்பட்டால் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியும் வழங்குவதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தபோதும் அரசாங்கம் அதனை இன்னமும் நிறைவேற்றவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கங்கள் நிறைவேற்றத் தவறியமையாலேயே தமிழர்கள் ஆயுதங்களைத் தூக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலை தற்பொழுது முஸ்லிம் மக்களுக்கும் ஏற்படக்கூடிய அபாயம் தோன்றியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னர் முஸ்லிம்கள் விவசாயத்தில் மாத்திரம் ஈடுபட்டுவந்தனர். எனினும், தற்பொழுது அவர்கள் அவ்வாறு இல்லை. பல்வேறு துறைகளில் சென்று தேர்ச்சிபெற்றிருப்பதால் சுயமாகச் சிந்தித்துச் செயற்படுகின்றனர் எனக் குறிப்பிட்ட நௌஷாட், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லா மற்றும் பிள்ளையான் என்ற தனிநபர்களுக்கிடையிலான போட்டியாகவின்றி தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான போட்டியாக மாறியிருப்பதாகக் கூறினார்.

இந்த விவகாரம் தற்பொழுது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் வன்முறையைத் தோற்றுவிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நௌஷாட் குறிப்பிட்டார்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போட்டியிட்டதால் எமக்கும் வெற்றிதான்- சசிதரன்

பிள்ளையான் குழுவினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போட்டியிட்டு ஆசனங்களைப் பெற்றிருப்பது தமக்குக் கிடைத்த வெற்றியென கிழக்கு மாகாணசபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிதரன் கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை எனக் குறிப்பிட்ட அவர், வன்முறைகளாலேயே அங்கு ஆளும் கட்சி வெற்றிபெற்றதாகவும் தெரிவித்தார். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அம்பாறையில் 4 ஆசனங்களை வென்றிருப்பதானது தமக்குக் கிடைத்த வெற்றியேயென அவர் குறிப்பிட்டார்.

No comments: