Monday, 19 May 2008

இரு அரசுகள் தேவை என்பதை அங்கீகரிக்க வேண்டும்: அவுஸ்திரேலிய முன்னாள் நீதியரசர்


இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், அவுஸ்திரேலியாவின் மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட், அந்த இரு அரசுகளும் கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

"இலங்கை இனச் சிக்கலின் அனைத்துலக பரிமாணம்" என்னும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார். வடக்கு-தெற்கு வேல்ஸ் (NSW) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஐட்ஜ் தலைமையில் இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

35-க்கும் அதிகமான அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், கொள்கை மையங்கள், மோதல் தணிப்பு நிறுவனங்கள் மற்றும் வடக்கு-தெற்கு வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலார்கள் போன்ற பல தரப்பினரும் பங்குபற்றிய நிகழ்வில் "இலங்கை இனச்சிக்கலின் இன்றைய பரிமாணம்" எனும் இந்த ஆவணம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் நீதியான சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மையம் (CJPD) ரன்ஸ்சென்ட் இன்டர்நசனல் எனும் அனைத்துலக கொள்கை வகுப்பு நிறுவனத்துடன் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்திய "இலங்கை இனச்சிக்கலின் அனைத்துலக பரிமாணம்" எனும் விடயம் தொடர்பான இருநாள் கருத்து அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துரைகள் மற்றும் விவாதங்களின் தொகுப்புக்கள் அடங்கிய இந்த ஆவணத்தில் அனைத்துலக புகழ்வாய்ந்த மோதல் தணிப்பு நிபுணர் பேராசிரியர் குல்டங், "தமிழ்நேசன்" இணையத்தளத்தின் ஆசிரியரும், கல்விமானுமாகிய நடேசன் சத்தியேந்திரா, லண்டன் பொருளாதாரப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுமேந்திரா பொஸ் ஆகியோரின் சிறப்பு உரைகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் தமிழ்- சிங்கள- அனைத்துலக அறிஞர்களினால் கருத்து அமர்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருந்தன. மேலும், முன்னாள் அமெரிக்கத் தூதுவர் லுன்சர்ட் அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பார்வை தொடர்பான கட்டுரையை சமர்ப்பித்திருந்தார்.

நிகழ்வுக்குத் தலைமை வகித்த நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஐட்ஜ், அனைத்துலக சமூகத்தின் தலையீடு பற்றிய விடயங்களை எடுத்தியம்பி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து ஆவணத்தினை அறிமுகப்படுத்தி உரையாற்றிய சிஜேபிடி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி அனா பராரஐசிங்கம் நூலில் பலதரப்பு பார்வையும் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் தலையீடு, மேற்கு - சீனா மற்றும் இந்தியத் தரப்புக்களிற்கு இடையேயான சிறிலங்கா தொடர்பான பொருளாதார, அரசியல் மற்றும் கேந்திர முக்கியத்துவம் சார்ந்த விவகாரங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் இந்த புவிசார் அரசியல் நோக்கிற்கு மாறான ஜனநாயக மீட்பு, மனித உரிமைகள் மற்றும் தாராளவாத சமாதானம் எனும் கோணத்தில் முன்வைக்கப்படும் பார்வையும் பதிவாகியுள்ளது என்பதனை சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் உரையாற்றிய அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்குப் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனையும், அந்த இரு அரசுகளும் கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனையும் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பங்கேற்ற அனைவரிற்கும் ஆவணம் வழங்கப்பட்டதுடன், நீதியான சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான மையத்தின் செயற்பாடுகள், நிதித்தேவைகள் தொடர்பான அறிமுகமும் செய்யப்பட்டது.

இந்த ஆவணம் விரைவில் லண்டன் மற்றும் கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை இனச்சிக்கலானது வெறுமனே தமிழ்-சிங்கள முரண்பாடு என்பதனைத் தாண்டி அதனில் அனைத்துலக தரப்புக்கள் வகிக்கும் பாத்திரம் தொடர்பான விவாதம் இனச்சிக்கலைப் புரிவதற்கும், அதனைத் தணிப்பதற்கும், நீதியான சமாதானத் தீர்வை தமிழ் மக்கள் பெறுவதற்கும் முக்கியமானது என்கின்ற நோக்குடன் இந்த ஆவணம் சிஜேபிடி அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.

அவணப் பிரதிகளைப் பெறவிரும்புவோர் info@cjpdonline.org தொடர்பு கொள்ளலாம் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்தனர்.


puthinam.com

No comments: