Friday, 9 May 2008

வாழ்வாதாரமொன்றில் ஈடுபடவுள்ள உரிமையைவிட, வாழ்வதற்கான உரிமை மிகவும் முக்கியமானது - மனோ கணேசன்

மனித உரிமைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் சி;றப்புரிமையை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மனோ கணேசன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் சிறப்புரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பல காரணிகளை கருத்திற்கொண்ட போதிலும், மனித உரிமைகள் தொடர்பான ஏதுக்களே முதனமையானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக அறிக்கையொன்றின் மூலம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார்.

படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக அரசாங்கம் தண்டனை வழங்குவதன் மூலம் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சிறப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் சர்ச்சையை தீர்ப்பதற்கு முன்னர் கடந்த இரண்டு வருடங்களில் காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் தகவல்களை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் சிறப்புரிமை இரத்து செய்யப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டதன் மூலம் அராசங்கமே இந்த பொருளாதார பின்னடைவிற்கு பதில்சொல்ல வேண்டும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சியின் மூலம் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்களக்கு விடிவு பிறக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments: