Wednesday, 14 May 2008

அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய்

பழ.நெடுமாறன்

"இந்தியாவிலும் சீனாவிலும் மக்களின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடே உலகம் முழுவதும் உணவுத் தானியங்களின் விலையேற்றத்திற்கு முதன்மையான காரணம்" என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிரொலித்திருக்கிறார்.

"இந்தியாவில் நடுத்தர வகுப்பினர் 35 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். செல்வம் பெருகும்போது சிறந்த உணவு வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து வேண்டும் என்று கேட்கத் தொடங்குவார்கள். இதனால், தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரிப்பதால் விலைகள் உயர்கின்றன" என்றும் புஷ் கூறியுள்ளார்.

சிற்றோடை ஒன்றின் மேற்புறத்தில் ஓர் ஓநாயும் கீழ்ப்புறத்தில் ஓர் ஆடும் நீர் அருந்திக் கொண்டிருந்தன . திடீரென ஓநாய் நான் குடிக்கும் தண்ணீரை ஏன் கலக்குகிறாய் எனக் கூறி சீறியது. "தண்ணீர் ஓடிவரும் கீழ்ப்பகுதியில் நான் குடிப்பது மேல் பகுதி நீரை எப்படிக் கலக்கும் என புரியாமல் அப்பாவி ஆடு திகைத்தது. ஆனால், ஓநாய் ஆடு மீது பாய்ந்து கடித்துக் குதறியது. அதனுடைய நோக்கம் ஆட்டை அடித்துத் தின்ன வேண்டும் என்பதுதான். அதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே.

அப்பாவி ஆட்டின் மீது பொய்க்குற்றம் சாட்டிப் பாய்ந்த ஓநாயை இந்தியாவின் மீது குற்றம் சாட்டும் புஷ் நினைவுபடுத்துகிறார்.

உலகெங்கும் உணவுப் பொருட்கள் மற்றும் இன்றியமையாப் பொருட்களின் விலைகளின் உயர்வுக்கு உண்மையில் யார் காரணம்? இந்தியால சீனா மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளா காரணம்? உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் நாடு எதுவோ அதுதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

உண்மையில் அத்தகைய நாடு அமெரிக்காதான். விலைவாசி உயர்வுக்கு அமெரிக்க அரசின் சுயநல அணுகுமுறைகளும் தவறான பொருளாதாரத் திட்டங்களுமே அடிப்படைக் காரணமாகும். இந்த உண்மையை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது ஜோர்ஜ் புஷ் பழிசுமத்த முற்பட்டிருக்கிறார். விலை உயர்வுக்கு அமெரிக்காதான் முழுமையான காரணம் என்பதை கீழ்க்கண்ட ஆதாரங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையான முதல் காரணம் உலகமயமாக்கல் கொள்கையே ஆகும். இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளப்பட்ட கடந்த 18 ஆண்டு காலத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பெரும் ஆதாயம் அடைந்துள்ளன.

இந்நாடுகளைச் சேர்ந்த செல்வர்கள் உலகப் பெரும் செல்வர்களாக உயர்ந்தார்கள். வளரும் நாடுகளில் உள்ள பெரும் முதலாளிகளும் கொழுத்துள்ளனர். ரூ.4000 கோடிக்கும் மேலான சொத்து மதிப்பு உள்ளவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், வளர்ச்சி அடையாத நாடுகளும் அதன் மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டாவது முக்கிய காரணம் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கின் மீது ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் தொடுத்த போர் ஆகும். இந்தப் போர் தொடங்குவதற்கு முன் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 25-30 டொலர்களாக இருந்தது.

ஆனால், இந்தப் போரைத் தொடர்ந்து எண்ணெய் பொருளாதாரம் அடியோடு மாறிவிட்டது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈராக்கில் போர் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது பீப்பாய்க்கு 100 டொலர்கள் கூடிவிட்டது. இதுமேலும் உயர்ந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக எல்லாப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.

மூன்றாவதாக தன்னுடைய எரிபொருள் தேவையை நிறைவு செய்வதற்காக அமெரிக்கா உயிரி எரிபொருள் (ஆடிணி ஈடிஞுண்ஞுடூ) உற்பத்தியை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சோளம் , சோயா, சூரியகாந்தி விதை போன்றவற்றிலிருந்து உயிரி எரிபொருளை மிகப்பெரிய அளவில் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்காவும் வேறு சில மேற்கு நாடுகளும் ஈடுபட்டன. சோளம் போன்ற பயிர்களுக்குத் தாராளமாக மானியம் வழங்கி உயிரி எரிபொருளின் உற்பத்தியைப் பெருக்க அமெரிக்க அரசு செய்த முயற்சிகளின் விளைவாக உணவுப் பற்றாக்குறை உருவாகி விலைகளும் தாறுமாறாக உயர்ந்து விட்டன. சொந்த நாட்டு மக்களிடமிருந்து இந்த உண்மையை மறைக்க புஷ் இந்தியா மீதும், சீனா மீதும் குற்றம் சாட்டுகிறார்.

"உணவுத் தானியங்களை உயிரி எரிபொருளாக மாற்றும் முயற்சிகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விடும்" என சர்வதேச உணவு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த அறிவுரையை ஏற்றுச் செயற்படுவது குறித்து ஐரோப்பிய நாடுகள் சிந்தித்து வருகின்றன.

நான்காவதாக முன்பேர வணிகமும் ஒன் லைன் வணிகமும் விலையேற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். வணிகச் சூதாடிகள் மிகப்பெரும் அளவில் உணவு தானியங்களைப் பதுக்கி வைக்க இவை உதவின. பெரிய நிறுவனங்கள் இந்த வணிகச் சூதாட்டத்தை நடத்துகின்றன. நியூயோர்க் நகரைச் சேர்ந்த அமெரிக்க பெருமுதலாளிகள் இந்த நிறுவனங்களை நடத்துகின்றனர். இந்தியாவில் அம்பானி போன்றவர்கள் இந்தக் கூட்டுக்கொள்கைக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

ஐந்தாவதாக வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாடு நம்முடைய நாடு. காலம் காலமாக நமது மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற விதைகளை நாம் உருவாக்கிப் பயிரிட்டுப் பயனடைந்து வந்தோம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து அளித்துள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் நமது விவசாயிகளிடம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வேளாண்மைத் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டது.

புதிய விதைகள் மண்ணின் தரத்தைச் சீரழித்து நிலத்தை மலடாக்கின. இதன் விளைவாக உற்பத்தி குறைந்தது. அதுமட்டுமல்ல மீண்டும் புதிதாக விதைக்க வேண்டுமானாலும் விவசாயி சேமித்துள்ள விதைகளை விதைக்க முடியாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விதைக்க முடியாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விலைக்கு வாங்கித்தான் விதைக்க முடியும். இதன் விளைவாக நமது வேளாண்மை என்பது பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்ததாக ஆக்கப்பட்டது.

ஆறாவதாக படித்த மத்திய தர வர்க்கம் உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொண்டதை ஜோர்ஜ் புஷ் குறை கூறுகிறார். இவ்வாறு குற்றம்சாட்ட அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ச்சி அடையாத நாடுகளில் வாழும் மக்களுக்கு கொக்கோ கோலா, பெப்சி போன்ற பானங்களையும், பிட்சா போன்ற உணவுப் பண்டங்களையும் அறிமுகப்படுத்திக் கொள்ளையடிப்பது யார்?

நமது நாட்டில் நமது உணவு வகைகளை நமது ருசிக்கேற்ப தயாரித்து அளிக்கும் சிற்றுண்டிச்சாலைகளும் உணவு விடுதிகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் மெக்டோனால்ட், கே.எப்.சி., சப்வே போன்ற உணவு விடுதிகளை இந்தியாவெங்கும் திறந்து புதிய புதிய உணவு வகைகளுக்கு மக்களைப் பழக்கப்படுத்தியது யார்? எல்லாம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களே.

உலக அளவில் விலை உயர்வுக்கு அமெரிக்காவும் மற்றும் மேற்கு நாடுகளுமே காரணம் என்பதை நாம் பார்த்தோம். ஆனால் இந்தியாவில் விலை உயர்வுக்கு அவைகளோடு இந்திய அரசின் தவறான அணுகுமுறைகளும் கொள்கைகளும் காரணங்களாகும். அவை வருமாறு;

இந்திய அரசும் மாநில அரசுகளும் கடைப்பிடித்த தவறான கொள்கைகளும் உள்நாட்டில் விலையேற்றத்திற்குக் காரணமாகியது. உலகமயமாக்கல் கொள்கையை கண்மூடித்தனமாகக் கடைப்பிடித்ததன் விளைவாக உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வேகமாக ஏறியது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் கால்நடைகளின் உணவுக்காக நமது தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுவும் நஷ்டத்திற்கு விற்கப்பட்டன.

உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டவுடன் வெளிநாடுகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து உணவு தானியங்களை நாம் இறக்குமதி செய்தோம். நமது விவசாயிகளுக்கு அரசு வழங்குகிற கொள்முதல் விலையை விட இது அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்து கோதுமையை மத்திய அரசு நேரடியாக இறக்குமதி செய்வதில்லை. தனியார் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோதுமையை அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதில்லை. அதற்கேற்ற அமைப்புகள் தன்னிடம் இல்லை என்ற காரணத்தைக் கூறி அதை மீண்டும் தனியாருக்கு 10 சதவீத மானியம் அளித்துக் கொடுக்கிறது . அவர்கள் அதை அதிக விலைக்கு விற்கிறார்கள்.

உணவு எண்ணெய் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆனால் எள், நிலக்கடலை, தேங்காய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைக்கக்கூடிய விலை மிகக் குறைவானதாகும். விலையேற்றத்தின் விளைவாக விவசாயிகளுக்கு எவ்வித ஆதாயமும் கிடைக்கவில்லை. மாறாக வணிகச் சூதாடிகள் கொள்ளையடிக்கிறார்கள்.

இந்தியாவில் கோதுமை உற்பத்தி 7.6 கோடி தொன்களாகும். அரிசி உற்பத்தி 9 கோடி தொன்களாகும். ஆனாலும் கோதுமையையும், அரிசியையும் நாம் இறக்குமதி செய்கிறோம். அதிக விலை கொடுத்து வாங்கும் இந்தப் பணத்தை நமது விவசாயிகளுக்குக் கொடுத்தால் நிச்சயம் உற்பத்தியைப் பெருக்குவார்கள்.

2030 ஆம் ஆண்டில் உணவு தானியத்தின் உற்பத்தி 50 சதவிகிதம் அதிகரிக்காவிட்டால் மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை.

நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள 193 பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளில் ஒரு சிறிது அளவை விவசாயிகளுக்கு வழங்கினால் உற்பத்தி பெருகும். மாறாக பெருமுதலாளிகள் மேலும் மேலும் கொழுப்பதற்கு அரசுகளின் திட்டங்கள் உதவுகின்றன.

உலகமயமாக்கல் கொள்கையை அடியோடு கை கழுவிவிட்டு, நமது மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிப்பதுதான் இந்த பேரழிவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

-தினமணி

1 comment:

ttpian said...

this bastard bush is the culprit in abusing tamil community:
Ayya nedumaran-pl.wait-very soon bush will retaire and plug the hair from the egg!