Friday, 23 May 2008

'நேஷன்' பிரதி ஆசிரியர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

'நேஷன்' பத்திரிகையின் பிரதி ஆசிரியர் கடத்திச் செல்லப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று நண்பகல் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

கொள்ளுப்பிட்டி சந்தியில் நண்பகல் 12.30 மணிமுதல் 01.30 மணி வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஊடகவியலாளர்களும், சிவில் சமூக அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அண்மைக்காலத்தில் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் இது எனக் கருதப்படுகிறது.

காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம், கொள்ளுப்பிட்டியிலிருந்து காலி முகத்திடலை நோக்கிய வீதி மூடப்பட்டிருந்ததோடு, இப்பகுதியில் பெருமளவு பொலிசாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

"கீத் நாயரைத் தாக்கியது யார்?", "வழமைபோன்று இம்முறையும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாதா?", "இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்" எனும் கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

இதற்கிடையில், 'நேஷன்' பத்திரிகையின் பிரதி ஆசிரியர் கீத் நாயர், கடத்தப்பட்டமை மற்றும், தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments: