யாழ் குடாநாட்டில் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கரவெட்டிப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் இனந்தெரியாத ஆயுதக் குழுவினரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றிருப்பதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கரவெட்டி மேற்குப் பகுதியைச் சேர்ந்த செல்லையா செல்வராசா (46), செல்வராஜா நிர்மலாதேவி (43) ஆகிய இருவருமே கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். வீட்டுக்குச் சென்ற ஆயுததாரிகள் அவர்களைக் கடத்திச்சென்றிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைவிட துண்ணாலை கிழக்குப் பகுதியில் மாணிக்கவாசகர் மதனராசா (34) என்ற இளம்குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 14ஆம் திகதிமுதல் காணாமல்போயிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காளிகோவிலடிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையாரான வசந்தரூபன் (26) என்பவர் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றிருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வைத்தீஸ்வரன் விஜயராணி என்ற யுவதி காணாமல்போயிருப்பதாக அவருடைய தாயார் இன்று யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த மேசன் வேலைசெய்யும் 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளார்.

No comments:
Post a Comment