Friday, 9 May 2008

அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்

அம்பாறை நகர மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவமானது பலத்த சந்தேகத்துக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பாறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி.யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

அம்பாறை நகர மத்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக ஐ.தே.க. கவனத்தை செலுத்தியுள்ளது.

கிழக்கு மாகாண பாதுகாப்புக்கென பெரும் பங்காற்றிய விஷேட அதிரடிப் படையினரை பிள்ளையானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல முகாம்களிலிருந்து அரசாங்கம் அகற்றியது. இதற்கிடையே கிழக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசாங்க அமைச்சர்களின் ஆதரவாளர்கள் போல அங்கு சென்று சில நபர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தை மீட்க முடிந்ததாக கூறி அரசாங்கம் விழாக்களை நடத்தியமையும் இங்கு நினைவு கூரப்பட வேண்டும். நிலைமை இவ்வாறிருக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக பலத்த சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது. இந்த குண்டு வெடிப்பை எவர் நடத்தியிருந்தாலும் அதை ஐ.தே.க. வன்மையாகக் கண்டிக்கின்றது.

No comments: