Friday, 9 May 2008

இன்றைய கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இனநெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் ஒரு திருப்புமுனையாக அமையப்போவதில்லை

காலகண்டன்

நடக்கும் என்பார் நடக்காது

நடவாதென்பார் நடந்துவிடும்.

இருக்கும் என்பார் இருக்காது.

இருக்காதென்பார் இருந்து விடும்.

இது ஒரு பழைய சினிமாப் பாடல். இதன் அர்த்தம் இலங்கையின் அறுபது வருட கால பாராளுமன்ற ஜனநாயக அரசியலில் இடம்பெற்று வந்த பல்வேறு நிகழ்வுப் போக்குகளுக்கும் பொருந்தும். அவ்வாறே வடக்கு, கிழக்கின் தமிழ்த் தேசியவாத அரங்கிற்கும் பொருந்தக்கூடியதாகும். கடந்துவந்த அரசியல் நிகழ்வுப் போக்குகளின் சரி, பிழைகளையும் அவற்றுக்கான காரண காரியங்களையும் உரியவாறு கண்டுகொள்ள மறுக்கும் தனி நபர்களாலும் அரசியல் சக்திகளாலும் யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் மீண்டும், மீண்டும் தவறுகள் இழைக்கின்ற செக்கிழுத்த பாதையில் தான் அரசியலை வழிநடாத்திச் செல்ல முடிகிறது. அதன் விளைவுகள் மக்கள் அனைவருக்குமே இழப்புகளாகவே அமைந்து வந்துள்ளன. இவை இன்றைய சூழலில் ஆழ்ந்து நோக்கத்தக்கவையாகும்.

இன்று கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறுகிறது என்பதை விட நடாத்தப்படுகிறது என்பதே சரியான பதம். இதுவரை பின்பற்றப்பட்டு வந்த சம்பிரதாய ஜனநாயகம் என்ற முதலாளித்துவ ஜனநாயக அரசியல் கட்டமைப்பின் கீழ்த்தான் நடாத்தப்படுகிறது. அதுவும் ஏற்கனவே பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கைத் துண்டித்து தனியாக்கிய கிழக்கிலேயே இத்தேர்தல் நடாத்தப்படுகிறது. அதுகூட ஒரு இயல்பு நிலையில் சமாதான சூழலில் இடம்பெறவில்லை. அரசியல் அதிகாரம், ஆயுத ஆதிக்கம் என்ற பின்புலத்திலேயே திணிப்புத் தேர்தலாக நடாத்தப்படுகிறது. மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற மிரட்டல் கலந்த வேண்டுகோளும் வலிந்து வாக்களிக்க வைக்கும் ஒரு வகை யந்திரத்தனமான தேர்தலாகவே நடாத்தப்படுகிறது.

இத்தேர்தல் மக்கள் நலன்கள் சார்ந்து அவர்களது விருப்பத்தின் பேரில் நடாத்தப்படும் தேர்தல் அல்ல. ஆளும் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தினதும் அதன் சுக்கான் இயக்கியுமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் அவரது சகோதரர்களினதும் விருப்பின் பேரில் நடத்தப்படும் தேர்தலாகும். முற்றிலும் அரசியல் யதார்த்தமாகவும் நாட்டின் பிரதான பிரச்சினையாகவும் இருந்து வரும் தேசிய இனப்பிரச்சினையை முற்று முழுதாகவே மறைத்து திசை திருப்புவதற்காகவும் மேற்கொள்ளப்படும் தேர்தலாகவே காணப்படுகிறது. அத்துடன் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இருப்பை உத்தரவாதப்படுத்தும் வகையிலும் இத்தேர்தல் ஆளும் அதிகாரத் தரப்பினருக்கு அவசியமாகின்றது.

இவ்வாறு இருந்த போதிலும் இன்று இடம்பெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் ஊடே அங்கு இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிழக்கு மாகாணத்தில் 14 இலட்சத்து 19 ஆயிரத்து 602 பேர் வாழ்கின்றனர். இவர்களிடையே வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 பேராகும். மூவினங்களையும் சேர்ந்த மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையில் தமிழர்கள் முதல் இடத்தையும் முஸ்லிம்கள் இரண்டாம் இடத்தையும் சிங்களவர்கள் மூன்றாம் இடத்தையும் கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணம் தமிழ் - முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசமாகவும் அவர்களிடையேயான வாழ்வின் உறவுநிலை ஐக்கியப்பட்ட ஒன்றாகவுமே இருந்து வந்துள்ளது.

இம்மாகாணத்தில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிகத் தாழ்ந்ததாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக்குச் சற்று முன்னதாக இருந்தே அவர்களது எண்ணிக்கை விகிதாசாரம் அதிகரிக்கச் செய்யப்பட்டு வந்தது. அவ் அதிகரிப்பு இயல்பான ஒன்றல்ல. திட்டமிட்ட பேரினவாத உள்நோக்கங்கள் கொண்ட குடியேற்றங்களால் நிரப்பப்பட்டு வந்ததென்பது வரலாற்றுப் பதிவுகளாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இடைவிடாது திட்டமிட்டே கிழக்கின் இனவிகிதாசாரத்தை மாற்றி அரசியல் பொருளாதாரப் பிடியைத் தமது கைகளில் வைத்திருக்கும் கொள்கையை முன்னெடுத்து வந்துள்ளன. அதன் இன்னொரு வளர்ச்சியைத் தான் இன்று நடக்கும், மாகாண சபைத் தேர்தல் பிரதிபலித்துக் காட்டுகின்றது. இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளுமே தேர்தல் களத்தில் மோதல் சக்திகளாக உள்ளன.

இவ்விரு ஆளும் வர்க்கக் கட்சிகளில் இணைந்தே தமிழ் - முஸ்லிம் கட்சிகள் போட்டி போடுகின்றன. கடந்த காலத்தின் பேரப் பேச்சு அரசியலின் தொடர்ச்சிதான் இன்றும் நிகழ்கின்றது. ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிரிவாக இருந்து வந்த கருணா - பிள்ளையான் குழுவை தம் வசப்படுத்திக் கொண்டனர். முதலில் இராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பயன்படுத்திய பின் அதே குழுவை அரசியல் கட்சியாக்கிக் கொண்டனர். அதுவே இன்று பிள்ளையான் தலைமையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து முன்னாள் பிரதியமைச்சர் தலைமையில் ஒரு பகுதியினரை இழுத்து அரசாங்கம் வெற்றிலையில் நிறுத்தியுள்ளது. பதவிக்கு வந்தால் பிள்ளையானா அல்லது ஹிஸ்புல்லாவா முதலமைச்சர் என்பது உள்ளார்ந்த போட்டியை உருவாக்கியுள்ளது. பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டி இருவருக்கும் முதலமைச்சர் பதவியைக் காட்டி கிழக்கின் வெற்றிக்குத் தமிழ் முஸ்லிம் வாக்குகளை அதிகரிக்க பசில் ராஜபக்ஷ காய்களை நகர்த்தி வருகிறார். முன்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்ற ஜே.வி.பி. இப்போது தனித்து மிகப் பலவீனமான நிலையில் போட்டியிடுகிறது. அதற்குள் ஏற்பட்ட உடைவு சில ஆசனங்களுக்கான நம்பிக்கையையும் இழக்க வைத்துள்ளது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் ராஜபக்ஷ சகோதரர்களும் கிழக்கின் தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் சகல வகை அஸ்திரங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஒளி, ஒலி, அச்சு ஊடகங்கள் எவ்வித தயக்கம், கூச்சம் இன்றி வெற்றிலைக்குப் பிரசாரம் செய்து வருகின்றன. அதனை நியாயப்படுத்தும் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள், துஷ்பிரயோகங்களைப் பட்டியல் இட்டுக் காட்டி இதெல்லாம் "பாராளுமன்ற ஜனநாயகத்தில்" இயல்பானவை எனக் காட்டி வருகின்றனர். இவற்றுக்கும் அப்பால் இரகசிய வாக்கு மோசடிக்கு திரை மறைவு வேலைகளை அரசாங்கம் செய்து வருவதாகக் கூறி ஐக்கிய தேசியக்கட்சி கண்டனமும் ஆர்ப்பாட்டமும் நடாத்தியது. இன்றைய தேர்தலில் ஜனநாயகத்தை" நிலை நாட்டும் வகையில் எது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் "வெற்றி" என்பது மட்டுமே குறிக்கோள்.

ஜனாதிபதியின் கிழக்குப் பயணங்களும் அபிவிருத்தி பற்றிய கண்காட்சிப் பிரசாரங்களும் அலரிமாளிகையில் இருந்து செய்மதி தொலைக்காட்சி வழியான சந்திப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் கிழக்கை மாகாண சபைத் தேர்தலில் கைப்பற்றிக் கொள்ளும் அதி தீவிர முயற்சியாகவே காணப்படுகிறது. சுருங்கக் கூறின் ஆட்சி அதிகாரபலம், பணம், அரச வளங்கள் என்பனவற்றுடன் கிழக்கில் மக்களிடையே வளர்க்கப்பட்டு வந்த முரண்பாடுகளும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தின் மூலமும் இத்தேர்தல் வெற்றி கொள்ளப்பட்டால் இனப் பிரச்சினை, விடுதலைப் போராட்டம், நியாயமான அரசியல் தீர்வு என்பதெல்லாம் இத் "தேர்தல் வெற்றியால்" மறைக்கப்பட்டு கிழக்கு மக்கள் தமக்கும் தமது "ஜனநாயகத்திற்கும் வாக்களித்திருப்பதாக காட்டபடும். அத்துடன் முதலமைச்சர் பதவி ஜனாதிபதியின் அதி விசுவாசியான ஒருவருக்கு வழங்கப்படும். அத்தகைய முதலமைச்சர் ஒரு "பொம்மை" யாக ஒரு "கையாளாக" வீற்றிருந்து அரசிற்கு சேவகம் செய்வார். அவர் யார் என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பே தெரிய வரும்.

இதேவேளை தமது மூன்று பாராளுமன்றப் பதவிகளைத் துறந்து விட்டு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்று, மாவட்டங்களிலும் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. பலரும் எதிர்பார்க்காத வகையில் ஐக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து நிற்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த கூட்டணிக்கே வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அது, நேரடியாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்திற்கும் அதன் கூட்டணிகளுக்கும் எதிராக வாக்களிக்க வேண்டும் என்றே கூறியிருக்கிறது. அத்துடன் பேரினவாதத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அப்படியாயின் ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுது பேரினவாதத்தைக் கைவிட்டது என்பது தான் புரியவில்லை. கூட்டமைப்பின் இயல்பான நேச சக்தி ஐக்கிய தேசியக் கட்சி என்பது புரிந்து கொள்ளக் கூடியது தான். அது மட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், மாவை சேனாதிராஜா ஆகிய கட்சித் தலைவர்களிடையே இந்தியாவின் நேரடி வழிகாட்டலில் சந்திப்பும் உரையாடலும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இதனை வைத்தே அரசாங்கத் தரப்பு புலிகள் இயக்கம் ரணில், ஹக்கீம் ஆகியோருக்குப் பின்னால் இருப்பதாகப் பிரசாரம் நடாத்துகின்றது. சில முஸ்லிம் அமைச்சர்கள் யானைக்கு வாக்களிப்பது புலிகளை மீண்டும் கிழக்கிற்கு அழைத்து வரும் செயல் என்று வெற்றிலை வைத்து மக்களுக்குப் பிரசாரம் செய்கிறார்கள். அத்தகையோர் இணைந்து நிற்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் யார் என்பதைப் புரிந்து கொள்ளாதது தான் சிரிப்புக்குரியதாகும்.

மேலும் ரணில் - ஹக்கீம் கூட்டானது கிழக்கில் அரசாங்கத்தின் பிடியை உடைப்பதாகவும் தமது செல்வாக்கை இத்தேர்தல் மூலம் நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்தி வருகிறது. இத்தேர்தலில் யானை வெற்றி பெற்றால் அதற்கு மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடுவர். ஆனால், முதலமைச்சர் யார் என்ற சர்ச்சை அதிகம் இடம்பெற மாட்டாது. அது முஸ்லிம் காங்கிரஸுக்கு உரியதாகவே இருக்கும். தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ், முஸ்லிம், சிங்கள ஒற்றுமை பற்றிப் பேசப்படுகிறது. குறிப்பாக ரவூப் ஹக்கீம் ஆற்றுகின்ற உரைகள் தமிழ் மக்களை கவர்ந்து கொள்வதாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால், தேர்தலுக்குப் பின்பு பதவி அதிகாரம் செல்வாக்கு என்பவற்றால் தமிழ் முஸ்லிம் ஐக்கியத்திற்கு வேட்டு வைக்கப்படாது பேணிக் கொள்ளப்படுமா என்ற கேள்வியும் கிழக்கின் தமிழ் மக்களிடமிருந்து வரவே செய்கிறது. அவ்வாறே தேர்தலுக்குப் பின் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற கேள்வி முஸ்லிம்களிடமிருந்தும் எழவே செய்கிறது. ஏனெனில், கிழக்கிலே தமிழ் முஸ்லிம் உறவு திட்டமிட்ட பேரினவாத சூழ்ச்சிகளால் சிதறடிக்கப்பட்டு வந்துள்ளது. அதனைப் புரிந்து கொள்ளாது தமிழ் முஸ்லிம் தரப்புகளும் மோதல்களுக்கு தம்மை ஆளாக்கி வந்துள்ளன. குறிப்பாக தமிழ் ஆயுத இயக்கங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை நடாத்தி வந்துள்ளன. அதேபோன்று முஸ்லிம் ஆயுததாரிகளும் தமிழர் மீதான தாக்குதல்களை மேற்கொண்டும் வந்தனர். இத்தகையதொரு அவல நிலை தொடர்ந்தும் கிழக்கில் நிகழக்கூடாது என்பதை இன்று இடம்பெறும் மாகாண சபைத் தேர்தல் உறுதிப்படுத்தி உத்தரவாதப்படுத்துமா? இதுவே தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

எவ்வாறாயினும் இன்று இடம்பெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இனப்பிரச்சினைக்கான யுத்தம், போராட்டம், அரசியல் தீர்வு ஆகிய முக்கியமான பிரச்சினைகளில் ஒரு திருப்புமுனையாக அமைய மாட்டாது. ஏனெனில், இத்தேர்தல் மகிந்த சிந்தனையின் கீழான பேரினவாத முதலாளித்துவ ஆளும் அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலாகும். இதனால் கிழக்கின் அரசியல், அபிவிருத்தி, புனரமைப்பு, புனர்வாழ்வு போன்ற நிலைகளில் எவ்வித வெளிச்சமும் ஏற்பட மாட்டாது. அத்துடன் கிழக்கின் மக்கள் மட்டுமன்றி தெற்கின் சிங்கள மக்களும் திசை திருப்பப்பட்டு ஏமாற்றப்படுவர். அதன் மூலம் யுத்தத்திற்கான உக்கிரம் மேலும் நியாயப்படுத்தப்படும். முழு நாடும் பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிகளுக்குள் மேலும் அமிழ்ந்து கொள்ளவே செய்யும். ஆளும் வர்க்கத்தினருக்கு கிழக்கில் வெற்றி கிடைத்தால் பெரும் கொண்டாட்டமாக இருக்கவே செய்யும். தோல்வி அடைந்தால் கிழக்கில் மேலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் விஸ்வரூபம் எடுப்பதைத் தடுப்பது இயலாத ஒன்றாகிவிடும் அபாயமே இன்று உள்ளது.

No comments: