Friday, 9 May 2008

அணு இரகசியங்களை பெனாசிர் வட கொரியாவுக்கு வழங்கினார்: பெனாசிரின் வாழ்க்கை வரலாற்று நூல்

மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, 1993ம் ஆண்டு வட கொரியாவுக்குச் சென்றபோது முக்கிய அணு ரகசியங்களை தனது கைப்பட வட கொரிய அரசிடம் வழங்கியதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷியாம் பாட்டியா என்பவர் எழுதியுள்ள, பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ, வட கொரியத் தலைநகர் பியாங்கியாங்கிற்குச் சென்றார். அப்போது முக்கிய அணு தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தனது மேலாடையினுள் வைத்துக் கொண்டார். அவற்றை வட கொரிய அரசின் முக்கிய அதிகாரிகளிடம் தனது கைப்பட பெனாசிர் பூட்டோ வழங்கினார் என பாட்டியாவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுரேனியம் செறிவூட்டும் தொழில்நுட்பம் குறித்த தகவல்களையே, வட கொரிய அதிகாரிகளிடம் பெனாசிர் பூட்டோ வழங்கியதாக பாட்டியா தெரிவித்துள்ளார். அதற்குப் பரிசாக வட கொரியா, பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்கியது என்றும் பாட்டியா தெரிவித்துள்ளார்.

'குட்பை ஷாஸாதி' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நூலில், இந்தத் தகவல்களை பெனாசிர் பூட்டோவே தன்னிடம் தெரிவித்ததாகவும் பாட்டியா கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ராணுவ ஆய்வுகளை இந்தியா, ரஷ்யா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் தீவிரமாக கண்காணித்து வந்ததால், வேறு யார் மூலமாகவும் இதை வட கொரியாவுக்குக் கொடுக்க விரும்பாத பெனாசிர், தானே அதை எடுத்துச் செல்லத் தீர்மானித்ததாகவும் அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: