* யாழ். மாவட்ட எம்.பி.சிறில் கேள்வி ஜனநாயகம் என்ற சூத்திரத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட ஆட்களின் கூட்டுப்பலம் பலம் என்கின்ற கணித வாய்ப்பாடு இருக்கும் வரைக்கும் ஓர் இன மேலாதிக்க உணர்வு கொண்ட பெரும்பான்மை எண்ணிக்கையுடன் இணைந்து ஜனநாயகப் பயிற்சியினை மேற்கொள்வதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தில் கன்னியுரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இலங்கைத் தீவில் வாழ்கின்ற தமிழ்த் தேசிய இனம் தனது மக்களின் கூட்டு வாழ்க்கை ஊடாக கட்டியெழுப்பக் கூடிய ஜனநாயக பொறிமுறைகளைத் தக்க வைப்பதற்கான பொருத்தமான நில எல்லை வரையறைகளைக் கொண்ட பிரதேசங்களைப் பாதுகாத்து நிர்வகித்து எதிர்கால சந்ததியினருக்கு செழுமையுடன் கையளிக்கக்கூடிய அரசியல் நிர்வாக வடிவகத்தினை உருவாக்கி பேணுவதற்கே விரும்புகிறது. இதைத்தான் கடந்த 60 ஆண்டுகளாக இச் சபையிலும் சபையின் வெளியிலும் உரத்த குரலில் கூறி வந்துள்ளோம். இலங்கையின் இன முரண்பாட்டிற்கும் பன்மை சமூக அமைப்பிற்கும் பொருந்தக்கூடிய ஒரே ஒரு அரசியல் தீர்வும் இதுதான் என்பதையும் இதற்கு அப்பால் எந்தத் தீர்வும் இந்த அழகிய தேசத்தின் அமைதியை எடுத்து வராது எனவும் நான் உறுதியாக நம்புகின்றேன். வளர்ந்து வரும் உலக அரசியல் பண்பாட்டில் கோழைத்தனமான, குரோத உணர்வையும் ஓர் இன ரீதியான நலனையும் , சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளையும் கடந்து நவீன ஜனநாயக பண்பை வளர்த்தெடுத்துக் கொள்ள நான் திடசங்கற்பம் கொண்டவன். மாற்றுக் கருத்துகள் மலிந்துள்ள இன்றைய சூழ்நிலையில், கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் அரசியல் பண்பாட்டில் வளர்ந்தவன் நான் . ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள எனது தெரிவுக்கு பின்புலமானவர்களின் குரலை பிரதிபலிப்பு செய்வது எனது தார்மீக கடமையாகும். நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதியானது இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. ஒன்று யாழ்ப்பாண மாவட்டம் மற்றையது கிளிநொச்சி மாவட்டம் . இந்த மாவட்டங்களில் வாழ்கின்ற எம் மக்கள் போரின் கொடிய சுமையை ஒரு தோளிலும் , பொருளாதாரத்தின் கொடிய சுமையை மறுதோளிலும் நேரடியாக சுமந்து உயிர்வாழும் உரிமைக்குக் கூட உத்தரவாதம் செய்ய முடியுமா? என்று ஏங்கிய நிலையில் தினம் மரணத்தின் நிழலில் ஏன்! மரணத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சுமைகளையும் அழுத்தங்களையும் நெருக்குவாரங்களையும் நீக்கி மனித நேயப் பண்புகளை மீளவும் கட்டியெழுப்ப ஒரே ஒரு வழி சமாதானம் என்பதுதான். இந்தப் பாதையில் முரண்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டியதுதான் மிக உயர்ந்த ஜனநாயகப் பண்பாகும். இனவாதம் பேசுவதால் இனங்கள் அந்நியப்படவே ஊக்கமளிக்கும். கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் தேசியத்தின் அரசியல் அபிலாஷைகளுக்குக் கொடுக்கப்பட்ட உதாசீனம் தான் இந்தக் கொடிய போரை தோற்றுவித்துள்ளது. இந்த கொடிய போரினால் தமிழ் மக்கள் மட்டும் அல்ல சிங்கள மக்களும் , முஸ்லிம் மக்களும் அழிவையும் , அனர்த்தங்களையும், இடர்பாடுகளையும், இடப்பெயர்வையும் , பசியையும் , பட்டினியையும் சந்தித்து நிற்கின்றார்கள். இதை நாம் நன்றாக சிந்திக்க வேண்டும். போர் ஒரு போதும் தீர்வாக மாட்டாது. அது மனிதர்களை இறக்கச் செய்யுமே தவிர, மிஞ்சப் போவது ஒன்றுமில்லை. தமிழ் மக்கள் ஒரு போதும் போரை விரும்பியவர்கள் அல்ல. போர் தமிழ்மக்கள் மீது சுமத்தப்பட்டது. சுமத்தப்பட்ட போரை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. இதனால், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் சாவைத் தழுவிக் கொண்டார்கள். 1,85,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கோடான கோடி சொத்துகள், தொழில் வளங்கள், விளைநிலங்கள் , கடல்வளங்கள் அழிக்கப்பட்டன. அழிக்கப்படுகின்றன.இது தொடரத்தான் வேண்டுமா? எம் கண் முன்னே எம் மக்கள் அழிக்கப்படுவதையும் எம் கண்முன்னே எம் வளங்கள் அழிக்கப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் சிங்கள மக்களை நேசிக்கின்றோம். அவர்கள் எங்கள் நண்பர்கள். அதேவேளை, சிங்கள மக்கள் அனுபவிக்க விரும்புகின்ற , அனுபவிக்கின்ற அதே உரிமைகளை நாங்களும் அனுபவிக்க விரும்புகின்றோம். இதில் என்ன தவறு இருக்கின்றது. இது ஒவ்வொரு மனிதனுடைய பிறப்புரிமை மட்டுமல்ல வாழும் உரிமையும் கூட. மனிதாபிமானம் , மனிதப்பண்பு , மனித உரிமைகள் என்று அழகாகப் பேசுகின்றோம். கேட்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால், மனிதாபிமானம் , மனிதப்பண்பு , மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுடைய புரிந்துணர்வின் அடிப்படையிலேயே கட்டியெழுப்ப முடியும் . ஓரினத்தின் உணர்வுகளை ஆசாரங்களை பிரச்சினைகளின் தாக்கங்களை மற்றைய பெரும்பான்மையினம் ஆழமாக மனச்சுத்தியுடன் புரிந்து கொள்வதன் மூலம் தான் அந்த இனம் தனக்கே உரித்தான கௌரவமான வாழ்க்கையை அமைத்து வாழ்வதன் மூலம்தான் இத்தீவின் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையை பரஸ்பர நல்லுறவை வளர்க்க முடியும். இதற்கு மனித சமநிலை உரிமையை அங்கீகரிப்பதும், பன்மைத்தன்மை சமூகத்தை அங்கீகரிப்பதும் அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் தான் அர்ப்பணிப்புடன் கூடிய சாத்தியமான அரசியல் பாதையாகும். இதுவே அரசியல் தீர்வுமாகும். மத இலட்சியத்தில் எம்மிடையே முரண்பாடுகள் கிடையாது. ஆனால் அரசியலில் தான் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இந்த அரசியல் முரண்பாடுகள் தற்போது மதங்கள் இடையே ஆழ ஊடுருவியுள்ளது. இது எமக்கு மிகுந்த சோதனையையும், வேதனையையும் தோற்றுவித்துள்ளது. வடக்கில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் நாட்டின் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான பழைமையும், பெருமையும்,மகிமையும், புதுமையும் நிறைந்த மடுமாதாவின் தேவாலயத்தின் புனிதத்திற்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுமார் 400 வருடங்களாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பல்வேறு பட்ட சமய சமூக மக்களின் ஆத்மீக தாகத்தை இத் தேவாலயம் நிறைவேற்றியுள்ளது. கடந்த இரு சகாப்தங்களாக யுத்தத்தினால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலும் அடைக்கலமும் அளித்து அவர்களின் வாழ்விற்கு நம்பிக்கை அளித்த மடு அன்னையும் யுத்தத்தினால் தன் பதியைவிட்டு மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்துள்ளார். இது மிகுந்த வேதனையையும் மானிட வரலாற்றில் மறக்க முடியாத வடுவுமாகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறிய மக்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக மடுத்தேவாலயம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பெருத்தன்மையுடன் செயற்பட்டது போல அரசும் பெறுமதியாகவும் பெரும்தன்மையுடனும் விரைந்து செயற்பட்டு மடுத்தேவாலயப்பகுதியை யுத்த தவிர்ப்பு வலயமாக சமாதானத்தின் பூங்காவாக மதிப்பளித்து அது 1982 ஆம் ஆண்டின் புனித யாத்திரைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் மத ஒற்றுமையின் உயர்ந்த அடையாளமாகும். இன்று அரசியலின் பெயரால் யுத்தத்தின் பெயரால் மத குருமார்கள் கொலை செய்யப்படுவது சாதாரண விடயமாகவும், நாகரிகமாகவும் மாறியுள்ளது. இறை பணியாளர்களை மதிக்க வேண்டும். எந்த மதத்தவர்களானாலும் அவர்களுக்குரிய வணக்கத்தை செலுத்த வேண்டும். அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக கத்தோலிக்க மத குருமார்களான அருட் திரு.ஜிம்ரோம் அடிகளார், அருட் திரு.பாக்கிரஞ்சித் அடிகளார், கடந்த மாதம் மாங்குளம் பங்குத் தந்தையும் வடகிழக்கு மாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளருமான அருட் திரு. எம்.எக்ஸ்.கருணாரெட்ணம் அடிகளாரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மனித உரிமைகள் பற்றி அரசியல்வாதிகளோ அன்றி மதவாதிகளோ குரல் கொடுத்தால் அவர்கள் சாகடிக்கப்படுகிறார்கள் . இவை அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் கவலையைத் தந்துள்ளது. மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் தங்கள் தோள்களிலே சுமந்தவர்கள். மக்கள் துயர் துடைக்கும் வாழ்வியல் பணிகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள். இறைவழி நின்று நடுநிலை தவறாது மக்களுக்காக என்றும் குரல் கொடுத்தவர்கள். இந்த மத குருக்களின் இழப்பு அனைத்து மக்களினாலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவைகளையும் அரசு அரசியலாக மாற்றாது இரு கண்களினாலும் பார்க்க வேண்டும். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முரண்பாடுகள் மனிதனுக்கு பொதுவானது அதனை முகாமை செய்வதில் மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளோம். அதேவேளை யுத்தத்திற்கு ஊக்கம் அளிக்கும் இனவாத, மதவாத,சிந்தனை எமது தலைமைத்துவ திறனை கேள்விக்கும் கேலிக்கும் இடமாக்கும். எனவே உயரிய பண்பாட்டின் ஊடாக இலங்கைத் தீவில் வாழும் சகல சமூகங்களும் தமக்குரிய உரிமைகளைப் பெற்று சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மதிப்பாகவும் பொருண்மிய சுபிட்சத்துடனும் வாழ இச் சபை எடுக்கும் துணிச்சலான வழித்தடத்தில் நாங்களும் பயணிக்க என்றும் தயாராக உள்ளோம்.
Friday, 9 May 2008
சிங்களவர் அனுபவிக்கும் உரிமையை தமிழர் அனுபவிக்க விரும்புவது தவறா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment