Friday, 9 May 2008

பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்

* இலங்கைக்கு நாடுகடத்தப்படலாம்?

பிரிட்டனில் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி நிறைவுற்ற நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டு கருணா குடிவரவுத்துறையின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பி.பி.சி.செய்தி சேவையில் தெரிவிக்கப்பட்டதாவது;

கருணா இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன் போர்க்குற்றங்களை இழைத்தாரென அவர் மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்ததுடன் அவை தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தன.

ஆனால் பிரிட்டனின் அரச வழக்குத் தொடுப்புத்துறை கருணா மீது மேலும், எந்தவொரு வழக்கையும் தொடுத்து தண்டனை பெற்றுத்தருமளவிற்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளை பெற்றுத்தரும் போதிய ஆதாரங்கள் இல்லையென்று லண்டன் பொலிசாரிற்கு கூறியுள்ளது.

இந்நிலையில் கருணாவை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் வாய்ப்புகள் அதிகமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கருணா சார்பில் ஆஜரான பிரிட்டன் சட்டத்தரணி டேவிட் பிலிப் தெரிவிக்கையில்;

எனக்குத் தெரிந்த வரை கருணா தனது தண்டனைக் காலத்தை சிறையில் அனுபவித்துவிட்டார். எனவே அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டாரென்பதுதான் அதன் அர்த்தம்.

ஆனால் அவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றப்படுவதற்காக தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், பிரிட்டனின் விசா பெற்றுக் கொள்வது தொடர்பாக அவரேதான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, கருணாமீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச் சாட்டுகளையும் ஊடகங்கள் மூலம் தான் நான் அறிந்துள்ளேன். இது வரை அவராக அவற்றைப் பற்றி கூறியதில்லையெனத் தெரிவித்தார்.

மேலும், கருணாமீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமிடத்து அவரது குற்றங்களை நேரில் கண்டவர் யார், கருணாவுக்கு எதிராக சாட்சி சொல்வார்களாவென்பது மற்றுமொரு சிக்கலுக்குரிய விடயமாகும்.

கருணா மீது வழக்குத் தொடரப்பட வேண்டுமானால் அவர் அரச சார்பான ஊழியராக இருத்தல் வேண்டும் அல்லது பிரிட்டன் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

இதன் காரணமாக 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் அரசுக்கு எதிரான குழு ஒன்றில் இருந்தமையால் அக்காலப்பகுதிக்குரிய குற்றங்கள் மீது வழக்குத் தொடரமுடியாது.

பிரிட்டன் அரசின் இம்முடிவு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட அறிக்கையில்;

சர்வதேச சட்டப்படி பிரிட்டன், கருணா, சித்திரவதை தொடர்பாகவும், பணயக்கைதிகளைக் கடத்தியமை, சிறார்களை போரில் இணைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும் சாட்சியமளிக்க வாய்ப்பளித்தவர்களிடமும் பிரிட்டன் இந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்குத் தனக்கு உரிமை உள்ளது என்பதை பிரிட்டனரசு தெளிவுபடுத்தவில்லை.

கருணா மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் வரை நிரபராதி என்றே கருதப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: