ஜயகாந்தன் ராமநாதன் எனும் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவிடம் இலங்கை பொய் கூறியுள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதனை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஜயகாந்தன் ராமையா எனும் 25 வயது இளைஞர் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கடவத்தை நகரில் வைத்து வெள்ளைவானில் வந்த இரகசியப் பொலிசாரால் கடத்தப்பட்டார். இது குறித்து கடத்தப்பட்டவரின் சகோதரர் 2007 மார்ச் 22 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்" எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவுக்கு 2007 ஏப்ரல் 4ஆம் திகதி அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை, பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவிடம் இலங்கை நிராகரித்துள்ளதுடன், குறித்த பெயருடைய எவரும் இரகசியப் பொலிசாரினால் கைது செய்யப்படவில்லை எனவும் இலங்கை கூறியுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment