எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் ஜே.வி.பி.யின் 5வது தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லையென ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்துசென்று விமல் வீரவன்ச தலைமையில் உருவாகியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
விமல் வீரவன்ச மற்றும் ஏனைய 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து உத்தியோப+ர்வமாக விலக்கப்படுவார்கள் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய மாநாட்டுக்கு வருமாறு விமல் வீரவன்ச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் கடிதங்கள் மூலமும், பத்திரிகைகள் மூலமும் அழைப்பிதல்கள் அனுப்பியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
“கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படுமாயின் கட்சி உறுப்பினர் வகித்த பதவிகள் இல்லாமல் செய்யப்படும். மத்திய குழுவுக்குப் புதியவர்களை நியமிப்பதற்கு இதுஒரு சந்தர்ப்பமாக கருதப்படும். தலைமைப் பதவியை மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்குப் பதிலாக ரில்வின் சில்வா புதிய தலைவராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவ்வாறானதொரு தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் புதிய திட்டங்கள் மற்றும் ஜே.வி.பி.யின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரசார நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்கிழமை தேசிய மாநாட்டில் அறிவிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜத ஹேரத் கூறியுள்ளார். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை ஜே.வி.பி.யின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. ஜே.வி.பி. இரண்டாக உடைந்த பின்னர் எதிர்வரும் செவ்வாய்கிழமையே முதன்முறையாக தேசிய மாநாடு நடைபெறுகிறது.

No comments:
Post a Comment