Monday, 26 May 2008

வன்னிமாவட்ட பல்கலைக்கழகம் வவுனியாவில் அமைக்கப்படும்:கிஷோர்


வன்னிமாவட்ட பல்கலைக்கழகம் வவுனியாவில் அமைக்கப்படும்:கிஷோர்




வன்னிப் பிரதேச மக்களின் நன்மை கருதியே வவுனியாவில் தாதிமார் பயிற்சிக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல வன்னி மாவட்டத்துக்குரிய பல்கலைக்கழகமும் வவுனியாவில் அமைக்கப்படும். இதேபோல, மன்னாரிலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றும் விரைவில் திறக்கப்படவுள்ளது.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்திற்குரிய தாதியர் பயிற்சிக் கல்லூரியின் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்;

வவுனியா பொது வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் செய்து தருமாறு சுகாதார அமைச்சரிடம் கேட்டபோது அதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சிக் கல்லூரி செயற்படத் தொடங்கியதும் வன்னி மாவட்ட ஆஸ்பத்திரிகளில் தாதிமார்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் பயிற்சி நிலையத்தையும் விடுதியையும் சுப நேரத்தில் திறந்து வைத்தனர்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நந்தகுமாரன் பேசுகையில்;

அனைவரினதும் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளது. போரினால் எமது பிரதேசங்களில் சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பொது சுகாதார பரிசோதகருக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விண்ணப்பித்திருந்தனர். 13 பேர் மட்டுமே தற்போது பயிற்சி நெறியினைத் தொடர்கின்றனர். அடிப்படைத் தகைமைகள் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு விசேட சலுகை அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தாதியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தாதியர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது.

ஒரு மனிதனுக்கு அளப்பரிய சேவை செய்யக்கூடிய வாய்ப்பு தாதியர் சேவை. இதனால் கிடைக்கும் பெருமிதம் வேறு எந்தவொரு சேவையிலும் நீங்கள் பெறமுடியாது. அந்தளவுக்கு மகத்துவம் பொருந்திய சேவை இதுவாகும் என்றார்.

மாவட்ட அரச அதிபர் சி.சண்முகம் பேசுகையில்;

உள்நாட்டு யுத்தம் நடைபெற்றபோதிலும் எமது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1990 ஆம் ஆண்டு வவுனியாவின் சனத்தொகை வடக்கே இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களினால் இரண்டு மடங்காகியது. தேவைகளும் அதிகரித்தது. வடக்கின் நுழைவாசலாகவே வவுனியா விளங்குகின்றது. அதில் தாதியர் பயிற்சிக் கல்லூரியும் இடம்பெற்றுள்ளது.

கல்வித்துறையின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல உயர் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மனிதசமூகத்திற்கு சேவை செய்யும் தொழிலாகவே தாதியர் சேவை அமைந்துள்ளது என்றார்.

சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண ஆலோசகர் டாக்டர் எஸ்.ஜெகநாதன் , வடக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் வி.குமாரவேல்பிள்ளை, அமைச்சின் சிரேஷ்ட உயர் அதிகாரிகள் டாக்டர் திருமதி ஜி.சமரநாயக்கா, டாக்டர் ஆர்.யூ.இந்திரசிறி ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்ட 115 பயிற்சி தாதிமார் தமக்குரிய நியமனப் பத்திரங்களை இந்த வைபவத்தில் பெற்றுக் கொண்டனர்.

மூன்று வருட கால பயிற்சியின் பின்னர் இவர்கள் தத்தமது மாவட்டங்களிலேயே பணியாற்ற வேண்டும் என்பது நிபந்தனையாகவுள்ளது. எந்தவகையிலும் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் கோரமுடியாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: