Monday, 12 May 2008

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக வீதியிலிறங்கிப் போராட எதிர்க்கட்சி தீர்மானம்

வன்முறைகள் நிறைந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதுடன், சர்வதேச ரீதியிலும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் தெரிவித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல், வன்முறைகள் நிறைந்த தேர்தல் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகப்படியான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதுடன், சர்வதேச ரீதியிலும் பிரசாரங்களை முன்னெடுக்க இருப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறினார்.

வெற்றிகரமாகத் தேர்தல் முடிவடைந்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்திருந்தார். "ஆம் தேர்தல் முடிவடைந்துள்ளது. கிழக்கு மாகாண மக்களின் வாக்களிக்கும் உரிமை இந்தத் தேர்தலுடன் முடிவடைந்துள்ளது" என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டுமெனவும், தேர்தல்கள் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளரிடம் தாம் கோரிக்கை விடுத்திருந்தபோதும், தேர்தல்கள் வன்முறைகள் நிறைந்ததாகவே முடிவடைந்துள்ளது. பிள்ளையான் குழுவினருடன், அமைச்சர்கள் இணைந்து கள்ளவாக்குகளை இட்டு வாக்குப்பெட்டிகளை நிரப்பியிருந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

"என் வாழ்க்கையில் இவ்வாறு மோசமான தேர்தலை காணவில்லை"- ரவூப் ஹக்கீம்

தனது வாழ்க்கையில் இவ்வாறு வன்முறைகள் நிறைந்த மோசமான தேர்தலொன்றைக் காணவில்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

திருகோணமலையில் பிள்ளையான் குழுவினர் பெருமளவில் இல்லையென்பதாலேயே அங்கு எம்மால் வெல்லக்கூடியதாக இருந்தது. எனினும், முஸ்லிம் அமைச்சர்கள் வாக்காளர்களைத் தாக்கி வன்முறைகளில் ஈடுபட்டிருந்தனர். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிள்ளையான் குழுவினர் வாக்குப் பெட்டிகளை நிரப்பியுள்ளனர். இந்த வன்முறைகள் நிறைந்த தேர்தலுக்கு எதிராக உள்ளூரில் போராட்டங்களை நடத்தவிருப்பதுடன், சர்வதேச ரீதியிலும் பிரசாரங்களை முன்னெடுக்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: