ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான உசாஹா டெக்காசுக்கு சொந்தமான மலேசியாவின் மெக்ஸிஸ் டெலிகொம் நிறுவனம், இலங்கையில் 500-600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
தொலைக்காட்சி, இணையத்தளசேவை, மற்றும் வானொலி ஆகிய துறைகளிலேயே இந்த முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமிருப்பதாகவும், இருப்பினும் இதுவரை முதலீடு குறித்த தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் மலேசியா, கோலாலம்பூரிலுள்ள மெக்ஸிஸ் டெலிகொம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெக்ஸிஸ் நிறுவனத்தினால், தெற்காசியாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள செய்மதித் தொலைக்காட்சி அலைவரிசையினை உத்தியோகபூர்வமாக தொடக்கிவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் உயரதிகாரிகளே இதனைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான இந்த செய்மதித் தொலைக்காட்சி சேவை, தற்போது மலேசியா,இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 150,000 வீடுகளில் ஒளிபரப்பாகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் தொலைக்காட்சி, வானொலி மற்றும் தொலைத் தொடர்புத் துறையில,உசாஹா டெக்காசேவே முன்னணியில் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் கீழ்வரும், Astro All Asia Network இனால் நடாத்தப்படும் தொலைக்காட்சி சேவையை வாராந்தம் 10 மில்லியன் பேர் கட்டணம் செலுத்திப் பார்வையிடுகின்றனர். அதேபோன்று வானொலி சேவையினையும் வாராந்தம் 10 மில்லியன் பேர் கேட்கின்றனர்.
இந்த நிறுவனம் தற்போது 83 சர்வதேச அலைவரிசைகளை சொந்தமாக நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment