Saturday, 17 May 2008

கிழக்கின் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்தியா முயற்சி – அனுரகுமார திஸாநாயக்க

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக தமக்கு வேண்டிய ஒருவரை நியமித்து அதன் மூலம் கிழக்கில் அதிகாரங்களை கைப்பற்ற இந்தியா முயற்சித்து வருவதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் கிழக்கின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்திய முனைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கோ அல்லது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவோ கிழக்குத் தேர்தல் நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம் கிழக்கில் தேர்தல்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லக்பிம ஞாயிறு இதழுக்கு அளித்த விசேட செவ்வியொன்றின் போதே அனுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கம் எமது நாட்டின் பெருமளவிலான பொருளாதார வளங்களை சுரண்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எரிபொருள் சந்தை, மற்றும் மின்வலு எரிசக்தி போன்ற துறைகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சுரண்டல்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசியலில் முக்கிய பங்களிப்பாளராக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு உள்ளது.

இந்தியா கடந்த காலங்களில் யுத்த நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசியலில் தலையீடு செய்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோல்வியடைந்திருப்பதனால் அரசியல் ரீதியான தலையீட்டின் மூலம் கிழக்கில் உள்ள வளங்களை சுரண்டுவதற்கு இந்திய அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவரை முதலமைச்சராக நியமித்து, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் கிழக்கை ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் உள்ள முக்கிய வள மையங்களின் உரிமையை இந்தியா தற்போது பெற்றுள்ளது. குறிப்பாக சம்பூர், நிலாவெளி, புல்மோட்டை போன்ற பல பிரதேசங்களில் பாரிய திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது. முப்படையினரால் மீட்டெடுக்கப்பட்ட கிழக்கை மீண்டுமொருமுறை காட்டிக்கொடுக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: