Thursday, 8 May 2008

குற்றஞ்சுமத்தமுடியாவிட்டால் விடுதலை செய்யுங்கள்- சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் கோரிக்கை

எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சுதந்திர ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மற்றும் ஏனைய இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவுட்ரீச் இணையத்தளத்தின் ஆசிரியரான திஸ்ஸநாயகம், ஈ.குவாலிட்டி அச்சகத்தின் உரிமையாளர் ஜசிஹரன் மற்றும் அவருடைய மனைவி வளர்மதி ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுத் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டள்ளனர்.

அவுட்ரீச் இணையத்தளத்துடன் தொடர்புவைத்திருந்த 7 பேர் விசாரணைகளுக்கா அழைத்துச்செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டதாக சுதந்திர ஊடக இயக்கம் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

திஸ்ஸநாயகம் கைதுசெய்யப்பட்டு 20 நாட்களின் பின்னர் அவரை 90 நாட்கள் தடுத்துவைக்கப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. அந்த நிலையில் திஸ்ஸநாயகத்தின் சார்பில் அடிப்படை மனித உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டபோதும் அவர் இதுவரை விடுவிக்கப்படவில்லையென சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

“கைதுசெய்யப்பட்டு 2 மாதங்கள் முடிவடைந்துள்ளபோதும் அவர்கள் மீது அதிகாரிகளால் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாவிட்டால் அவர்கள் மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஜக்குலின் பார்க் கூறியுள்ளார்.

No comments: