கிழக்கிலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத் மீண்டும் தலைதூக்கி உள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்ததாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிழக்கில் அண்மையில் தோன்றியுள்ள கலவரங்களுக்கு முஸ்லிம் ஜிகாத் குழுவே காரணம் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கிழக்கிலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்தின் நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அரசின் துணை இராணுவக்குழுவான பிள்ளையான குழுவிற்கும் முஸ்லிம் ஆயுதக்குழுவுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை மோதல்கள் வெடித்திருந்தன. அங்கு நடைபெற்ற படுகொலைகளைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தனர்.
முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லிம் ஆயுதக்குழுவின் நடமாட்டங்கள் அதிகம் உள்ளதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கில் "வாகாபிசம்"
கிழக்கில் சவூதி அரேபியாவின் நிதி உதவிகளுடன் "வாகாபிசம்" என்னும் தீவிர மதவாதம் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபியா, எகிப்து போன்ற நாடுகளுக்குச் செல்லும் இளம் முஸ்லிம் மக்கள் அங்கு தீவிர மத போதனைகளை பயின்று வந்து, அதனை இங்கு போதிப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment