Saturday, 24 May 2008

மக்கள் சரியான அரசியல் பாதையில் விழிப்படைந்து பயணிக்கத் தயார் இல்லாத நிலை நீடிக்கும் வரை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்கு கொண்டாட்டமே

காலகண்டன்

கடந்த 10-05-2008 அன்று இடம்பெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றிய கணிப்புகளும் கருத்துக்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கமும் அரசாங்க ஆதரவு கட்சிகளும் இத்தேர்தலை நியாயமான தேர்தல் என்றும் கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என்றும் கூறி நிற்கின்றன. சிற்சில சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் இத்தேர்தல் கிழக்கின் மக்களுக்கு சுதந்திரத்தையும் சுபிட்சத்தை நோக்கிய பாதையையும் கொண்டு வந்திருப்பதாகவே அரசாங்க சார்பு ஊடகங்கள் உரத்துக் கூறி வருகின்றன.

அதேவேளை, இத்தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் - ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டானது தோல்வி கண்டுள்ளது. இத் தோல்விக்கான காரணம் இத்தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவில்லை என்ற குற்றச் சாட்டை இவர்கள் முன்வைத்துள்ளனர். இத்தேர்தலில் பகற் கொள்ளை நடைபெற்றுள்ளது என்றும் மிரட்டல்கள், கள்ள வாக்குகள் வாக்களிக்க விடாது தடுத்தமைகள் போன்ற பல குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி - முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ளன.

இத்தேர்தல் முறைகேடுகள், நியாயமற்ற நடைமுறைகள் போன்றவற்றை தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சியினர் நேரில் சென்று முறையிட்டும் உள்ளனர். தேர்தல் ஆணையகத்தைப் பொறுத்தவரையில் கிழக்கின் தேர்தல் நியாயமானதாக நடைபெற்றுள்ளது என்ற கருத்தையே தேர்தல் ஆணையாளர் எடுத்துக் கூறியுள்ளார். இது வேலிக்கு ஓணான் சாட்சி சொல்லியது போன்றதாகும். அது மட்டுமன்றி தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று நியாயத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனை வழங்கியும் உள்ளார். தேர்தல்கள் ஆணையாளரை ஓய்வுபெற வேண்டிய காலத்தையும் தாண்டி பதவியில் வைத்திருப்பதற்கு அர்த்தம் இருக்க வேண்டும் அல்லவா? எந்தவொரு அரசாங்கமும் தமது பதவிக் காலத்தில் நடாத்தும் எந்தத் தேர்தலையும் எதிர்த்தரப்பினருக்குச் சாதகமானதாக அமைவதை அனுமதித்தது கிடையாது.

இந்த "ஜனநாயக தேர்தல் கலாசாரத்தை" முழு வேகத்துடன் ஆரம்பித்து வளர்த்து வந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்பது மறதிக்கு உரிய ஒன்றல்ல. வாக்களிப்பில் தில்லுமுல்லுகள் செய்வது, பெட்டி நிரப்புவது, பெட்டி மாற்றுவது, அவற்றுக்கும் மேலால் பெட்டிகளைத் தூக்கிச் செல்வது போன்ற தேர்தல் மோசடி நுட்பங்களை அறிமுகப்படுத்தியதே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலாகும். யாழ். மாவட்ட சபைத் தேர்தல் (1981), சர்வஜன வாக்கெடுப்பு (1982), ஜனாதிபதித் தேர்தல் (1989) போன்றவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி ஜனநாயகத் தேர்தல்களை கேலிக் கூத்தாக்கியது.

அதன் பின் பதவிக்கு வந்த பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டுமன்றி பின் வந்த பாராளுமன்றத் தேர்தல்களிலும் "ஜனநாயகத் தேர்தல்" என்பதை நிர்வாணப் படுத்துவதில் தமது கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளது. இவ்வாறு கடந்த அறுபது வருட காலப் பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழான தேர்தல்கள் என்பனவற்றில் மோசடிகள், முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் என்பவை தாராளமாகவே நடைபெற்று வந்துள்ளன என்பதே உண்மையாகும். இதில் இரண்டு ஆளும் வர்க்கப் பேரினவாதக் கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவைகள் அல்ல என்பது அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அவதானித்த பவ்ரல்அமைப்பு மேற்படி தேர்தல் பெருமளவிற்கு நியாயமானதாக நடைபெற்றது என்ற கணிப்பையே வெளியிட்டுள்ளது. சில முறைகேடுகள் இடம்பெற்றாலும் இத் தேர்தல் ஜனநாயக அடிப்படையில் நடைபெற்றதெனக் கூறி அரசாங்கத்தின் கூற்றுக்கு பலம் சேர்த்துள்ளது. இவ் அமைப்பு அரசாங்கத்திற்குச் சார்பான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக தேர்தலுக்கு, முன்பே எதிர்க்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதொன்றாகும். அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன பெயரளவில் அவ்வாறு இருந்த போதிலும் உள்நாட்டினதோ அன்றி வெளிநாடுகளினதோ அரசுகளின் அரவணைப்பிலேயே உயிர் வாழ்கின்றன என்பதே உண்மையானதாகும்.

அதேவேளை, இன்னொரு அரச சார்பற்ற நிறுவனமான காஃபி (CAFFE) வெளியிட்டுள்ள அறிக்கையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் அல்லவென்று தெரிவித்துள்ளது. வன்முறைகள், மிரட்டல்,கள் கொலைகள் எனப் பல்வேறு தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதையும் தேர்தல் விதிகள் மீறப்பட்ட சம்பவங்களையும் மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2 கொலைகள், 6 ஆட்கடத்தல்கள், 13 தாக்குதல்கள், 16 கொலை மிரட்டல்கள் இடம்பெற்றதாக அவ்வமைப்பு அறிக்கை செய்துள்ளது. அத்துடன், தேர்தல் தினத்தன்று மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 235 சம்பவங்கள் தேர்தல் முறைகேடுகளாக இடம்பெற்றுள்ளதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அரசின் சகல வளங்களும் முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளதுடன், அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் கீழ் சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர பொலிஸ் ஆணைக்குழு போன்றவற்றின் அமுலாக்கம் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவை யாவும் வெறும் கருத்துக்களும் பரிந்துரைகளுமேயாகும். இவை யாருடைய செவிகளிலும் ஏறப் போவதில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும் இத்தகைய வழிமுறைகளை விட்டால் வேறு மார்க்கம் எதுவும் இல்லை. இவர்கள் மக்களை அவர்களின் சுதந்திர உணர்வுகளுடன் செயற்பட அனுமதிப்பதில்லை. ஜனநாயகம் தேர்தல் சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் வெற்று அலங்கார வார்த்தைகளேயாகும். ஆரம்ப காலங்களில் பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு என்பவற்றால் மக்கள் வாக்களிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இன்று துப்பாக்கி மிரட்டல், வன்முறை போன்றவற்றால் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். மக்கள் வாக்களிக்கும் கருவிகளாக்கப்பட்டுள்ளனர். அந்த வாக்குகளைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் ஜனநாயகம் எனப்படுகிறது.

இவ்வாறு மோசடிகள் மிகுந்த கிழக்கின் தேர்தல் மூலம் மகிந்த சிந்தனை அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறது. அதுவும் ஐம்பது வீதத்திற்குக் குறைவான மக்களே வாக்களித்திருக்கிறார்கள். இதனை வைத்துக் கொண்டு மாகாணசபையை நடாத்தி ஜனநாயகத்தையும் அபிவிருத்தியையும் கிழக்கில் உருவாக்கி வளர்த்தெடுக்கப்போகின்றது. இதற்கு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைப் பயன்படுத்த முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கும் பத்துத் துறைகளை உள்ளடக்கிய அமைச்சுப் பதவியை ஹிஸ்புல்லாவிற்கும் வழங்கி இருக்கிறார் ஜனாதிபதி.

தேர்தல் முடிந்த கையோடு யார் முதலமைச்சர் என்பதில் பெரும் இழுபறி இடம்பெற்று வந்தது. தமிழரா அல்லது முஸ்லிமா முதலமைச்சர் என்ற கருத்துப் பிரசாரங்கள் இடம்பெற்றன. இதனால், கிழக்கின் தமிழ், முஸ்லிம் மக்களிடையே குரோதக் கருத்துக்கள் மேலும் வளர்க்கப்பட்டன. இதனையே ஆளும் வர்க்கப் பேரினவாத சக்திகள் விரும்புகின்றன. அவர்களது அடிப்படையானதும் நீண்ட காலத்திட்டமும் யாதெனில் வளங்களும், கேந்திர முக்கியத்துவம் மிக்கதுமான கிழக்கு மாகாணத்தை பேரினவாத நோக்கில் முற்றுமுழுதான சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதேயாகும். தமிழர்களதும் முஸ்லிம்களினதும் பாரம்பரிய பிரதேசமாக இருந்து வந்த கிழக்கை திட்டமிட்ட குடியேற்றங்களாலும் ஏனைய வழிமுறைகளாலும் சிங்கள மயப்படுத்துவதேயாகும். முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த அம்பாறை மாவட்டத்தின் இன விகிதாசாரம், மாற்றப்பட்டு சிங்களப் பெரும்பான்மை அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது.

அவ்வாறே திருகோணமலை மாவட்டமும் மாற்றப்பட்டு வருகின்றது. இத்தகைய போக்கினை மேலும் விரிவுபடுத்துவதே மாகாண சபை நிர்வாகத்தின் ஊடாக நடைபெறப் போகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் முதலமைச்சரான பிள்ளையானும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவுக்கு மகிந்த சிந்தனையால் கட்டப்பட்டிருப்பவர்களாகவே இருக்கப் போகிறார்கள். அவ்வாறு தான் ஹிஸ்புல்லா தலைமையிலான முஸ்லிம் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இருக்கப் போகிறார்கள். இவர்கள் கிழக்கின் தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை எந்தளவிற்கு பிரதிபலிக்கப் போகிறார்கள்? தேசிய இனப்பிரச்சினை என இலங்கையில் எதுவும் இல்லை எனவும் இருப்பதெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்பதாகவும் பிரதமர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனையே ஜனாதிபதியும் ஏற்கனவே உலக அரங்குகளில் எடுத்துக்கூறி வந்துள்ளார்.

அத்துடன், அரசின் உத்தியோகபூர்வ பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவும் கூறி வருகின்றது. அதேபோன்று ஜே.வி.பி.யும் அதிலிருந்த ஜே.என்.பி.யும் கூறி வருகின்றன. இத்தகைய கூற்றானது இலங்கையில் பிரதான முரண்பாடாகவும் பிரச்சினையாகவும் யுத்தமாகவும் காணப்படும் தேசிய இனப்பிரச்சினை என்ற அரசியல் யதார்த்தத்தை மூடி மறைக்கும் செயலாகும். எவ்வாறாயினும், உண்மையையும் யதார்த்தத்தையும் மூடி மறைப்பதென்பது மலையை மறைக்க திரை கட்டியது போன்றதாகும்.

கிழக்கிற்கு மாகாண சபையும் வடக்கிற்கு ஆலோசனை சபையும் என்பதன் ஊடாக இனப்பிரச்சினை என்பது இல்லை எனக் காட்டி அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மறுக்கப்பட்டு வருகிறது. பதின்மூன்றாவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் போன்றவற்றைக் வழங்காது இருந்து வரும் சூழலில் மாகாண சபையும் ஆலோசனைச் சபையும் எவற்றைச் சாதிக்கப் போகின்றன. பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறுவதையும் அரசியல் தீர்வு காணப்படுவதையும் மறுத்துவரும் மகிந்த சிந்தனை அரசாங்கம் மாகாண சபை, ஆலோசனை சபை என்பனவற்றின் மூலம் தீர்வு காணலாம் எனக் கனவு காண்பது வண்டிக்குப் பின்னால் குதிரையைக் கட்டிக் கொண்டது போன்றதாகும். இதன் மூலம் ஜனாதிபதியும் அவரது கொள்கை வகுப்பாளர்களும் இரண்டு அம்சங்களை நிறைவேற்றித் தமது ஆட்சி அதிகார இருப்பை உறுதிப்படுத்த முயன்று வருகிறார்கள். ஒன்று, கிழக்கை வடக்கில் இருந்து பிரித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் அபிலாஷையையும் சுயாட்சிக் கோரிக்கையையும் மறுத்து இல்லாமல் செய்வதாகும். இதற்கான ஒரு விளம்பரப் பலகையே பயங்கரவாத ஒழிப்பு என்பதாகும். இரண்டு, இத்தகைய நடைமுறையை யுத்தத்தின் மூலம் நிலைநாட்டப் போவதாகச் சிங்கள மக்களுக்குப் போக்குக் காட்டிக் கொண்டு அவர்களது பொருளாதார நெருக்கடிகளையும் வாழ்க்கைச் செலவின் வானளாவிய உயர்வுகளையும் திசை திருப்பிக் கொள்வதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வதாகும்.

எவ்வளவிற்கு கம்பத்தில் ஏறி நின்று கரணம் அடித்துக் காட்டினாலும் காசு வாங்க கீழே தான் வரவேண்டும் என்ற முதுமொழி ஒன்று உண்டு. அதேபோன்று இந்நாட்டு மக்களுக்கு ஒரு நாள் ஆளும் வர்க்க அதிகார சக்திகள் பதில் கூறியே ஆக வேண்டும். மக்கள் சரியான அரசியல் பாதையில் விழிப்படைந்து பயணிக்கத் தயார் இல்லாத நிலை நீடிக்கும் வரை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்குக் கொண்டாட்டமேயாகும்.

No comments: