Monday, 12 May 2008

ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் நடைபெற்ற மோசடிகளும், வன்முறைகளும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதுடன், எதிர்வரும் மனித உரிமை பேரவை அமர்விலும் இந்த விடயங்கள் எதிரொலிக்குமென்று மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து குறிப்பிட்டார்.

நாளை செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை மனிதவுரிமை மீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அங்கத்துவத்தை மீளப் பெறுவதற்கான வாக்களிப்பும் நடைபெறவுள்ளது.

அத்துடன் ஐரோப்பாவுக்கு இலங்கையிலிருந்து ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகை வழங்கும் முக்கிய விவகாரமும் தற்போது சூடுபிடித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அங்கத்துவம் இழக்குமாயின் ஐரோப்பாவின் வரிச்சலுகை இரத்தாகி ஆடைத்தொழிற்துறை குற்றுயிராகும் நிலமையும் ஏற்படும்.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பரவலான வன்முறைகள், மோசடிகளுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது. வாக்களிப்பை நியாயப்படுத்த முடியாதென சுயாதீன தேர்தல் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. இது பற்றி மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து;

வன்முறைகளும், மோசடிகளும் தேர்தலில் வியாபித்திருந்தமை மக்களின் ஐனநாயக உரிமைக்குத் தடையாக இருந்தது. இதனை சர்வதேசம் கூர்ந்து கவனித்திருக்கும். மோசமான சம்பவங்கள் இலங்கைக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்.

அடுத்து வரும் சர்வதேச அமர்வுகளில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஐரோப்பிய சமூகம் இதில் ஆர்வம் காட்டும் எனக் கூறினார்.

No comments: