Sunday, 4 May 2008

யுத்தமுடிவு: காலக்கெடு முட்டாள்தனமானது – முன்னாள் தளபதி:

யுத்தத்தை குறித்த காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று காலக்கெடு நிர்ணயிப்பது ஒரு முட்டாள்தனமாக நகைச்சுவை என முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க குறிப்பிட்டுள்ளதாக சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்குப் பிரச்சினையை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் மட்டும் தீர்க்க முடியாதெனவும், அதற்கு தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் மக்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளாக ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இராணுவப் படையில் உயர் பதவிகளை வகித்து வடக்கில் பல்வேறு யுத்த நடவடிக்கைகளை ஜெனரல் வனசிங்க முன்னெடுத்தவர். அரசாங்கம் வடக்கில் இராணுவ முன்நகர்வுகளை உக்கிரப்படுத்துவதன் மூலம் பல்வேறு பாரிய விளைவுகளை தற்போது மட்டுமன்றி எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் ரீதியான தீர்வே தேசியப் பிரச்சினைக்கான ஒரே வழி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாதெனவும் முன்னாள் படைத்தளபதி தெரிவித்துள்ளார். பெரும்பான்மை மக்கள் என்ற ரீதியில் சிங்கள மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, வடக்கில் வாழும் சகோதர தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.சர்வகட்சி குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 13 ஆவது அரசியல் திருத்தம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் என்பதே தனது தனிப்பட்ட கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: