இராணுவப் படைத்தளபதி சரத் பொன்சேகாவை பதவி கவிழ்க்க இராணுவ மேஜர் ஒருவர் சூழ்ச்சி செய்வதாக ஜே.வி.பி.யினால் வெளியிடப்படும் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முன்நகர்வுகளைச் செயலிழக்கச் செய்து இராணுவப் படைத்தளபதி லெப்டிணன் ஜெனரல் சரத் பொன்சேகாவை பதவி நீக்குவதற்கு இரகசிய சூழ்ச்சித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யினால் வெளியிடப்படும் இரிதா லங்கா பத்திரிகையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு இராணுவத் தோல்விகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரும் இந்த சூழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரியவருகிறது. வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்த முன்நகர்வுகளை வலுவிழக்கச் செய்து தற்போதைய இராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என ஜே.வி.பி. வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவப் படைத்தளபதி பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு கனா காணும் ஓர் இராணுவ உயர் அதிகாரியும் அண்மையில் இராணுவத் தகவல்கள் வழங்கப்படக்கூடாதென தடை விதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற படையதிகாரி ஒருவரும் இணைந்தே இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் முதலாவது கட்டமாக அண்மையில் இடம்பெற்ற முகமாலை சமரின் போது இராணுவத்தரப்பிற்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களுக்கு இராணுவப் படைத்தளபதியே பொறுப்பென சில ஊடகங்கள் வழியாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் உடந்தையாக செயற்படுவதகாவும் முகமாலை மோதல்களில் காயமடைந்த படைவீரர்களுக்கு இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கைகள் அண்மையில் கோட்டே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. முகமாலை மோதல்களில் காயமடைந்த படைவீரர்களுக்கு ஓ பொசிடிவ் ரக இரத்தம் தேவைப்படுவதாக கூறி தொலைபேசியூடாக எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சேவை நீட்டிப்பு பெற்று இராணுவத்தில் கடமையாற்றும் ஒரு இராணுவ மேஜரே இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிய சூழ்ச்சியின் சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் இராணுவம் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பாளியான இந்த இராணுவ மேஜர் படைவீரர்களின் உலர் உணவுகளை மோசடி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
முல்லைத்தீவு தோல்வி குறித்தான விசாரணை அறிக்கைகள் குறித்த இராணுவ அதிகாரிக்கு ஆதரவான ஓர் மத அமைப்பின் அழுத்தம் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிக் காலம் முடிவடைவதனால் தொடர்ந்தும் அவருக்கு சேவை நீட்டிப்பு வழங்காதுää அந்தப் பதவியை குறித்த இராணுவப் படையதிகாரி பெற்றுக் கொள்ள எத்தனிப்பதாக இரிதா லங்கா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment