Saturday, 24 May 2008

மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் கிடைக்கப்பெறாமையினால் கடன் சலுகைகளில் பாதிப்பு – ஐ.தேக.


மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அங்கத்துவம் கிடைக்கப் பெறாமையினால் கடன் சலுகைகள் மற்றும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை என்பவற்றில் பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மனித உரிமைகள், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்க உறுதியளித்த நாடென்ற ரீதியில் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் மறுக்கப்பட்டமை மிகவும் கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பாதுகாப்பு ஓர் நாட்டின் நன்மதிப்பை சவர்வதேச ரீதியில் அளவிடக் கூடிய ஓர் பிரதான அளவுகோளாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்தார். மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி மீதும், ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றம் சுமத்துவதன் மூலம் மனித உரிமைகளை பாதுகாக்க முடியாதென டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். இதேவேளை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அங்கத்துவம் மறுக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு ஓர் தோல்வி என்ற போதிலும் நாட்டு மக்கள் வெற்றியடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அதிகளவிலான காணாமல் போதல்கள், தன்னார்வ தொண்டு ஊழியர்கள் பணியாற்ற முடியாத, ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட முடியாத நாடாக தற்போது இலங்கை அடையாளப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். சட்டம் ஓழங்கு சீர்குலைந்த ஓர் நாடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இந்த நாட்டை மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments: