Saturday, 24 May 2008

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சி


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அங்கத்துவத்தை சிறிலங்கா இழந்ததைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்னர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. எனினும் அதற்கான ஆதரவுகளைப் பெறமுடியுமா என்ற சந்தேகங்களை தொடர்ந்து அது கைவிடப்பட்டிருந்தது.

எனினும் தற்போது சிறிலங்கா அரசாங்கம், ஐ.நாவின் மனித உரிமைகள் சபைக்கான வாக்கெடுப்பில் தோல்வி கண்டிருப்பதால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில சிறிலங்காவிற்கு எதிராக முன்னர் கொண்டுவர தீர்மானித்திருந்த தீர்மானங்களை மீண்டும் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் தொடர்பாக ஜேர்மனியும் மேலும் பல ஸ்கண்டிநேவியன் நாடுகளும் பெரும் விசனம் அடைந்திருந்ததுடன், அதற்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவர கடந்த ஆண்டு முயற்சித்திருந்தன.

சிறிலங்காவிற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் கடந்த ஆண்டு சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்ட போதும், அது அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை. எனினும் 47 அங்கத்தவர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த தீர்மானம் சில சமயங்களில் தோற்கடிக்கப்படலாம் என்ற சந்தேகத்தில் அது அன்று சமர்ப்பிக்கப்படவில்லை.

எனினும் கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிலங்கா தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து சிறிலங்காவிற்கு எதிரான தமது தீர்மானத்தையும் பரீட்சித்து பார்க்க சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடுமையான கண்டணங்களையாவது கொண்டுவர முடியும் என்று இந்த நாடுகள் நம்புகின்றன.

No comments: