Sunday, 18 May 2008

மிரட்டிவந்த ஹிஸ்புல்லா,மீண்டும் அரசாங்கத்துக்கு ஆதரவு ?

கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப்போவதில்லையென மிரட்டிவந்த ஹிஸ்புல்லா, அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையின் சுகாதார அமைச்சர் பதவியைப் பெறுப்பேற்கத் தற்பொழுது இணங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை அவர் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஹிஸ்புல்லாவை அலரிமாளிகையில் சந்தித்து, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்த ஹிஸ்புல்லா, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்கவும் இணங்கியிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு அநீதியிழைக்கப்படாது என ஜனாதிபதி, ஹிஸ்புல்லாவிடம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அந்த அமைச்சர் கூறியுள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனித்துச் செயற்படப்போவதாக ஹிஸ்புல்லா உட்பட மூவர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அறிவித்தனர். இந்த நிலையில் தற்பொழுது அரசாங்கத்துடன் இணைவதற்கு ஹிஸ்புல்லா தயாராகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தனது இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்னர் மீண்டும் ஒருதடவை ஆலோசிக்க வேண்டியிருப்பதாக ஹிஸ்புல்லா ஜனாதிபதிவிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி, ஹிஸ்புல்லாவைச் சந்தித்தபோது அவருடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மேல்மாகாணசபை ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், கடந்த சனிக்கிழமை ஹிஸ்புல்லா, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவு கலந்துரையாடியிருப்பதுடன், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையானுடனும் நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லிம் மக்கள் தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் ஹிஸ்புல்லாவிடம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: