Tuesday, 13 May 2008

திருமலை தாக்குதல் பொருளாதாரத்தின் மீது வீழ்ந்த அடி: "த பொட்டம்லைன்"

திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பெட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

திருகோணமலை துறைமுகம் பாதுகாப்பானதா? சிறிலங்காவின் ஏனைய துறைமுகங்கள் பாதுகாப்பானவையா? என்ற கேள்விகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.

திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான படையினர், தமது காவல் அரண்களில் கடந்த சனிக்கிழமை காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் லெப். கேணல் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கொமோண்டோக்கள் தாக்குதலுக்கு ஆயத்தமானார்கள்.

இத்தாக்குதலுக்கு முன்னர் அவர்கள் துறைமுகத்தின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை சேகரித்திருந்தனர்.

நீரடி நீச்சல் பிரிவினர் வெடிகுண்டுடன் துறைமுகத்தை நோக்கி நகர்ந்த போது, கடற்படையினரின் "சக்தி" என்ற விநியோகக் கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.

முன்னர் கிறீக் தேசத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த எம்.வி இன்வின்சிபிள் என்ற விநியோகக் கப்பல் துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.

83 மீ. நீளமும், 12 மீ. அகலமும் உடைய இக்கப்பல் 3,200 தொன் நிறையை எடுத்து செல்லக்கூடியது.

எனினும் கடற்புலிகள் "சக்தி" என எண்ணி இக்கப்பலை தவறுதலாக தகர்த்து விட்டனரா என்ற சந்தேகமும் கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2:15 மணிக்கு தாக்கப்பட்ட கப்பல் அதிகாலை 4:30 மணியளவில் மூழ்கியது.

இத்தாக்குதல் நடைபெற்ற போது கடற்படையினாரின் 10 சுற்றுக்காவல் படகுகள் தேடுதல் வெளிச்சம் பாச்சிய படி துறைமுகப் பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டிருந்தன. ஆனால் அவற்றால் விடுதலைப் புலிகளை கண்டறிய முடியவில்லை.

இப்படகுகளில் சோனார் கருவிகள் இருக்கவில்லை. இக்கருவிகள் நீருக்கு அடியிலான தாக்குதலை தடுப்பதற்கு உரியவை.

ஆழ்கடலில் தாக்குதலை நடத்திய கடற்படையினரால் திருகோணமலை துறைமுகத்தை பாதுகாக்க முடியவில்லை.

2007 ஆம் ஆண்டு கடற்படையினர் மேற்கொண்ட ஆழ்கடல் நடவடிக்கைகளில் இக்கப்பல் விநியோகங்களை மேற்கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் இத்தாக்குதல் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லது.

வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் சிறிலங்காவிற்கு வரும் கப்பல்களின் காப்புறுதி தொகையை அதிகரிக்கச் செய்யும். அது பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களும் ஆபத்தான துறைமுகங்களாக தரப்படுத்தப்படலாம். இது தமிழ் மக்களின் உளவுரணை அதிகரிக்கச் செய்யும். திருகோணமலை துறைமுகம் பெரும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டது.

துறைமுகத்தின் தென்பகுதி பாதுகாப்பு வலையைக்கொண்டது அல்ல. துறைமுகத்தின் வடபகுதி பாதுகாப்பு வலைகளை கொண்டுள்ள போதும் அதிலும் பல குறைபாடுகள் உள்ளன.

எனினும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அதனை இங்கு தெரிவிக்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: