கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் உட்பட பிரதான 6 பதவிகளுக்குமான நியமனம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனது சார்புக் கட்சித் தலைவர்களுடன் நேற்று (மே 13) விசேட பேச்சுவார்த்தையொன்றினை நடத்த இருந்தது. ஆனால், இப்பேச்சுவார்த்தை நேற்று (மே 13) நடைபெறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆம 15ல் லண்டனிலிருந்து திரும்பியதும் முதலமைச்சர் உட்பட பிரதான 6 பதவிகளுக்குமான நியமனம் குறித்து முடிவெடுக்கப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஆரம்பத்தில் பிள்ளையானுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்தது. பின்னர் விருப்பு வாக்குகளை அதிகம் பெறுபவர்களுக்கு என்றது. பின்னர் கூடிய ஆசனங்களைப் பெற்ற சமூகத்தில் உள்ளவருக்கு முதல்வர் என்றுது. இதனால் ஹிஸ்புல்லா தனக்கே முதலமைச்சர் என்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் இஸ்டத்திற்கு முடிவுகளை மாற்றியது. மே 10 தேர்தல் முடிவடைந்து மறுநாளே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்கு மறுநாள் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியும் முக்கிய நியமனங்களும் இன்னும் சில நாட்களுக்கு இழுபறியில் விடப்பட்டு உள்ளது.
பொறுப்பு வாய்ந்த ஒரு அரசின் தலைவராக இருந்திருந்தால் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விடயத்தை உடனடியாக ஜனாதிபதி கையாண்டிருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகிய மே 12 அன்றே வெற்றிபற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை அழைத்து கிழக்கு மாகாண அரசை உருவாக்கி இருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் இழுத்தடித்ததன் மூலம் ஊகங்களுக்கு நெய்யூற்றி முரண்பாட்டை அரசு கூர்மைப்படுத்தி இருக்கிறது. இரு சமூகங்களின் பிரதிநிதிகளும் தங்கள் தங்கள் சமூகத்தவரே முதலமைச்சர் ஆவர்கள் என்று அறிக்கைகளை விடுகின்றனர். எதிர்பார்ப்புகளை வளர்க்கின்றனர். இது மோசமான பிளவுகளை தமிழ் - முஸ்லீம் சமூகங்களிடையே ஏற்படுத்துவதாகவே அமைகிறது.
இலங்கைப் பாராளுமன்றத்தின் முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணசபைக்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நேற்று (மே 13) கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக்கடிதப்பிரதி ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் பிரதி அமைச்சர்களும் நேற்று (மே 13) பகல் ஒன்றுகூடி மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்கள் கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள மீள்குடியேற்ற அமைச்சில் ஒன்று கூடியதாகவும் தெரிய வருகிறது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது ஆகக் கூடுதலான உறுப்பினர்களை வென்றெடுக்கும் குழுவிற்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக அரசாங்கமும், ஜனாதிபதியும் பல சந்தர்ப்பங்ளில் பிரஸ்தாபித்துள்ளனர். முஸ்லிம் உறுப்பினர்கள் 8 பேர் கிழக்கு மாகாணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளமையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்கப்பட வேண்டுமெனவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எம்.எச்.எம். பௌசி, ரிசாத் பதியுதீன், எம்.எச். முஹம்மட் ஆகிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், அமீர் அலி, அன்வர் இஸ்மாயில், சேகு இஸ்ஸதீன், அப்துல் மஜீத் ஆகிய அமைச்சர்களும், அப்துல் பாயிஸ், பைசல் காஸிம், உசைன் பைளா, பைஸல் முஸ்தபா, முஹம்மட் முஸ்தபா ஆகிய உதவி அமைச்சர்களும் கையொப்பமிட்டு உள்ளனர். தற்போது வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் பேரியல் அஸ்ரப் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் சார்பில் (அவர்களின் அனுமதியுடன்) அவர்களின் அமைச்சுக்களின் செயலாளர்கள் கையொப்பமிட்டு உள்ளனர்.
அதேநேரத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பிள்ளையானை நியமிக்க வேண்டும் இல்லையானால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபாட வேண்டியேற்படலாம். அத்துடன் பதவியிலிருந்தும் விலக வேண்டி ஏற்படலாம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி மேயருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது. கிழக்கில் தமிழ் முதலமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விருப்பு வாக்குகள் அடிப்படையில் பிள்ளையானை முதலிடத்தில் உள்ளார். அத்துடன் தமிழ் மக்களது பெருமளவான வாக்கினாலேயே ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்நிலையில் எமக்கு முதலமைச்சர் பதவி தரப்படாவிட்டால் எமது தரப்பினர் பெரும் போராட்டங்களில் இறங்க வேண்டி ஏற்படலாம் என்றும் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் முதலமைச்சர் கனவுகளில் வலம்வர முதலமைச்சர் சுழற்சி அடிப்படையில் முதலமைச்சர் பதவியினை வழங்கலாம் என்ற கருத்துக்களும் நிலவுகின்றது. ஆனால், சுழற்சி முறையிலான முதலமைச்சர் பதவி கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படமாட்டாது என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் நேற்று (மே 13) தெரிவித்தார். முதலமைச்சர் ஒருவரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கே இருக்கிறது எனத் தெரிவித்த அமைச்சர் விரைவில் முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒக்ஸபோர்ட் யூனியன் மாநாட்டுக்கு செல்வதாக இருந்திருந்தால் அதற்குப் பயணமாவதற்கு முன்னரேயே இதனை முடித்து வைத்து விட்டுப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை. ஜனாதிபதி நாளை மே 15ல் நாடு திரும்பி மே 16 அல்லது அதற்கும் பின்னர் தான் முதலமைச்சர் பதவிக்கும் மாகாண சபையின் முக்கிய பொறுப்புகளுக்கும் உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறார். வாக்களித்த மக்களும் அந்த வாக்குகளைப் பெற்றவர்களும் ஒரு வாரத்திற்கு ஜனாதிபதியின் முடிவுக்காக காத்திருக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ‘மக்கள் ஜனாதிபதி’ இலங்கையைப் பொறுத்தவரை போஸ்ரரில் மட்டும் தான்.
முதல்வரை அறவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஊகங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வித்திட்டு உள்ளதால் முதல்வர் அறிவிப்பு ஒரு தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதும் அது கசப்புணர்வை ஏற்படுத்தும் என்பதும் இன முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் வெளிப்படையானது. இவ்வாறு இன முரண்பாட்டை தூண்டியவாயே அமைக்கப்படும் மாகாண சபை எவ்வாறு மூவின மக்கள் வாழும் கிழக்கை இனமுரண்பாடுகளைக் களைந்து ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தும்.
முதல்வர் ஒரு இனத்தவரிற்கு வழங்கப்பட்டால் துணை முதல்வர் மற்ற இனத்தவரிற்கும் முக்கிய நியமனங்களில் முதல்வரது இனத்தை சேராத இனத்தவரிற்கு முக்கிய நியமனங்களில் முதலிடத்தை வழங்குவதும் அவசியம். மேலும் வேட்பாளர்கள் இனமுரண்பாடுகளை தூண்டும் வகையிலான கருத்துக்களை கைவிட்டு இரு சமூகத்தினரும் அல்லது மூவின மக்களும் தங்களுக்கு வாக்களித்துள்ளனர் என்ற உண்மையின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிட வேண்டும்.
கிழக்கு மக்களின் எதிர்காலம் இவர்களது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று நம்புவோம்.
No comments:
Post a Comment